4041.'ஈரம் ஆவதும், இற் பிறப்பு ஆவதும்,
வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந் நெறி,
வாரம் ஆவதும், மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு அதோ?

     ஈரம் ஆவதும் - அன்பின் செயல் ஆவதும்; இற்பிறப்பு ஆவதும் -
நல்ல குலத்தில் பிறந்ததன் பயன் ஆவதும்; வீரம் ஆவதும் - வீரத்தன்மை
ஆவதும்; கல்வியின் மெய்ந்நெறி - கல்வி கற்று உணர்ந்த உண்மை
நெறியில்; வாரம் ஆவதும் - மேன்மை அடைவதும்; மற்று ஒருவன்
புணர்தாரம் ஆவதை -
மற்றொருவன் மணந்த மனைவியை; தாங்கும்
தருக்கு அதோ -
(அவளது கற்பிற்கு இழுக்கு வராதவாறு) மதித்துக் காக்கும்
பெருமையே அன்றோ?

     வாலி பிறன்மனை விரும்பிய பெருங்குற்றம் இங்குச் சுட்டப்படுகிறது.
எல்லா நல்ல குணங்களையும் அழிக்கும் பெருங்குற்றமாக இது கருதப்படுகிறது.
''பிறர்மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்'' (7405) என்ற
கும்பகர்ணன் கூற்றம், 'என்னொருவன் ஏதில் மனையாளை நோக்கு' (நாலடி.86)
என்றதும் பிறர்மனைவியை நோக்குதலே குற்றம் என உணர்த்தல் காணக்.
'பிறன் கடை நின்றாரின் பேதையார் இல்'' (குறள். 142) 'பிறன்மனை நோக்காத
பேராண்மை' (குறள். 148) என்றார் வள்ளுவர்.  தாரம் என்பது உயர்திணைப்
பொருள் உணர்த்தும் அஃறிணைச் சொல்லாதலால், 'தாரம் ஆவது'
எனப்பட்டது.  அன்பு, நற்குடிப்பிறப்பு, வீரம், கல்வி, மேன்மை ஆகிய எல்லா
நலங்களுக்கும் பெருமை சேர்ப்பது பிறன்மனை மதிக்கும் பண்பே என
இராமன் வாலிக்கு அறிவுறுத்தினான் என்க.  'வீரம் அன்று' (4026) என வாலி
கூறிய குற்றச்சாட்டிற்கு 'வீரமாவது இது' என இப்பாடலில் இராமன்
உணர்த்தினான்.                                               107