4042. | 'மறம் திறம்பல், ''வலியம்'' எனா, மனம் புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்; அறம் திறம்பல், அருங் கடி மங்கையர் திறம் திறம்பல்; - தெளிவு உடையோர்க்கு எலாம். |
தெளிவு உடையோர்க்கு எலாம் - தெளிந்த நல்லறிவினையுடைய பெரியோர்க் கெல்லாம்; வலியம் எனா - யாம் வலிமையுடையோம என்று கருதி; மனம் புறம் திறம்ப - மனம் அறத்திற்கு மாறான வழியில் சென்று; எளியவர்ப் பொங்குதல் - எளியவர் மீது சினம் கொள்ளுதல்; மறம் திறம்பல் - வீரத்தினின்று தவறுதலாகும். அருங்கடி மங்கையர் - அரிய பாதுகாவலையுடைய மகளிரிடம்; திறம் திறம் பல் - கற்பு நிலைக்கு மாறாக நடந்து கொள்ளுதல்; அறம் திறம்பல் - அறநெறியிலிருந்து தவறுதலாகும். எளியவர் மீது சினம் கொள்ளாமையே உண்மையான் மறம்; மகளிரிடம் தவறாக நடந்து கொள்ளாமை அறம் என உணர்த்தப்பட்டது. தப்பியோடிய தம்பியைத் துரத்திச் சென்று கொல்ல முயன்றதனாலும், அவன் மனைவியைக் கவர்ந்து கொண்டதாலும் தெளிவுடையோர் வெறுக்கத்தக்க மறம் திறம்பலும் அறம் திறம்பலுமாகிய குற்றங்களை வாலி செய்தான் என இராமன் உணர்த்தினான் என்க. (மனம்) புறம் திறம்ப மறம் திறம்பல், திறம் திறம்பல் அறம் திறம்பல் என அமைத்த தொடர் அமைப்புநயமிக்கதாகும். 108 |