4047. 'மணமும் இல்லை, மறை
      நெறி வந்தன;
குணமும் இல்லை, குல
     முதற்க ஒத்தன; -
உணர்வு சென்றுழிச் செல்லும்
      ஒழுக்கு அலால் -
நிணமும் நெய்யும்
      இணங்கிய நேமியாய்!

     நிணமும் நெய்யும் - பகைவர் உடற்கொழுப்பும் பூசிய நெய்யும்;
இணங்கிய நேமியாய் -
பொருத்திய சக்கராயுதத்தை உடையவனே; உணர்வு
சென்றுழி -
(எங்களுங்கு) மனம் சென்ற வழியே; செல்லும் ஒழுக்கு
அலால்-
செல்லுதலாகிய நடக்கையே அன்றி; மறைநெறி வந்தன - வேத
நெறிப்படிவந்தவையான; மணமும் இல்லை - திருமண முறைகளும்
சிறப்பிற்குஏற்றனவான; குணமும் இல்லை - நற்பண்புகளும் இல்லை.

     வீரனின் ஆயுதங்களைச் சிறப்பிக்கும் போது அவற்றில் பகைவரது ஊன்
தோய்ந்திருப்பதாகக் கூறுவது மரபாகும்.  அஃது வீரனின் வீரச்சிறப்பை
உணர்த்தும்.  'ஊன் செய்த சுடர் வடிவேல் உரோமபதன்' (239) என்றது
காண்க.  வேல் போன்ற படைகள் துருப்பிடிக்காமலிருக்க நெய் பூசுவர்.  நேமி
என்பது இங்கு ஆயுதத்தைப் பொதுப்பெயரால் குறித்ததாகும்.  நேமியாய் என
இராமனைச் சுட்டியதால் திருமாலே இராமன் என்ற உண்மை அவன்
அறியாமலேயே வந்த வார்த்தையாகக் கொள்ள வேண்டும்.  அரசன் காத்தற்
கடவுளாகிய திருமாலின் அம்சம் எனக் கருதப்படுவதால் 'நேமியாய்' என்று
இராமனை விளித்தான் எனவும் கொள்ளலாம்.  சென்றுழி - சென்ற உழி
என்பதன் தொகுத்தல்விகாரம்.                                   113