இராமனது மறுப்பு

4049. 'நலம் கொள் தேவரின்
      தோன்றி, நவை அறக்
கலங்கலா அற நல்
      நெறி காண்டலின்,
விலங்கு அலாமை
      விளங்கியது; ஆதலால்,
அலங்கலார்க்கு, ஈது அடுப்பது
      அன்று ஆம்அரோ.

     நலங்கொள் தேவரின் தோன்றி - நன்மையை மேற்கொள்ளும்
தேவர்கள் போலப் பிறந்து; நவை அற - குற்றங்கள் இல்லாதபடி;
கலங்கலா- நிலை கலங்காமல்; அற நல் நெறி - அறத்தின் நல்ல வழியை;
காண்டலின்- நீ அறிந்துள்ளமையால்; விலங்க அலாமை - (நீங்கள்)
சாதாரணவிலங்கினத்தைச் சார்ந்தவர் அல்லீர்; விளங்கியது - (என்பது)
தெளிவாகத்தெரிகின்றது; ஆதலால் - ஆகையால்; அலங்க லார்க்கு -
வெற்றி மாலைஅணிந்த வீரர்களாகிய உங்களுக்கு; ஈது அடுப்பது அன்று
ஆம் -
இவ்வாறுவிலங்கு என்று (சமாதானம்) கூறுவது பொருந்துவது அன்று
ஆம்.

     தேவரின் தோன்றி - தேவர் குலத்தில் தோன்றி என்றும் பொருள்
கொள்வர்.  இது வாலி இந்திரன் அம்சமாகப் பிறந்தவன் என்பதை
உட்கொண்டு கூறியதாகவும் கொள்ளலாம்.  'தருவுடைக் கடவுள் வேந்தன்
சாற்றுவான், 'எனது கூறுமருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன
(205) என்றமை காண்க. வாலி, உடம்மை விட்டு உயிர் பிரியும் நிலையிலும்
நல்லற நெறியின் இயல்பு இதுவெனக் குற்றமற உணர்ந்து பேசும்
திறம்பெற்றிருத்தலால் 'நவை அறக் கலங்கா அறநல்நெறி காண்டலின்'
என்றான்.  தேவரின் தோன்றலாலும்.  அறநெறி, தெரிந்திருத்தலாலும் வாலி
விலங்கு என்ற பெயரில் அறம் மாறிய செயல்களைச் செய்தல் கூடாது என
இராமன் விளக்கினான்.  அதனால் வடிவத்தால் மட்டும் ஒருவர்
தாழ்நிலையான விலங்கு நிலை அடைவதில்லை என்பது புலனாகிறது. அவரவர்
பண்புகளால் உயர்வு தாழ்வு குறிக்கப்படுகிறதேயன்றி, பிறப்பினால் அல்ல
என்பதை இராமன் வற்புறுத்தினான் என்க.  அதனால் எம்பால் குற்றம்
காண்பது பொருந்தாது எனக்கூறிய வாலிக்கு 'இது அடுப்பது அன்று' என்றான்.
அலங்கலார்க்கு - படர்க்கைப் பெயர் முன்னிலைக்கண் வந்தது, அரோ -
அசை.                                                        115