4050.'பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ, அறத்தாறுதான்?
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறிதியோ, பிழை உற்றுறு பெற்றிதான்?

     அறத்து ஆறுதான் - அறநெறி என்பது; பொறியின் யாக்கையதோ -
ஐம்பொறிகளோடு பொருந்திய உடம்பைப் பற்றியதோ?புலன் நோக்கிய -
ஐம்புலன்களால் நன்றம் தீதும் ஆராய்ந்து உணர்கின்ற; அறிவின் மேலது
அன்றோ -
அறிவைப் பற்றியது அல்லவா?நெறியும் நீர்மையும் -
அறநெறியினையும் அதன் இயல்பினையும்; நேரிது உணர்ந்த நீ -
செம்மையாக அறிந்து உணர்ந்த நீ; பிழை உற்று - தவறுகளைச் செய்து
விட்டு; உறு பெற்றிதான் பெறுதியோ - (பிழையன்று, என் செயல்
சரியானதென்று) சாதிக்கின்ற தன்மையைப் பெறக்கடவையோ?

     பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.  இப்பொறிகளை
வாயிலாகக் கொண்டு நிகழும் புலன்களாவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
என்பன. நோக்குதல் - நன்றும் தீதும் கண்டறிதல், பொறிகள் எல்லா
உயிர்களுக்கும் உண்டு.  புலனறிவோ உயிர்களின் சிறப்பிற்கேற்றவாறு உயர்வு
பெறும்.  வாலி அறிவு மிக்கவனாதலின் பொறிகளை மட்டும் கொண்டு தன்னை
விலங்கினம் எனக் கூறிக் கொள்வதும் தவறுகள் செய்வதும் தகுதியுடையன
அல்ல என்பதாம். தொல்காப்பிய மரபியலில் 'மக்கள் தாமே ஆறறிவுயிரே,
பிறவுமுளவே அக் கிளைப் பிறப்பே' (தொல். மர - 33) என்ற நூற்பாவும்'
பிறப்பென்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும்
மன உணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவு உயிராய்
அடங்கும் என்பது' என்ற உரையும் இங்குக் காணத்தக்கன.  பிழை உற்றுறு
பெற்றிதான் பெறுதியோ என்பதற்குத் தவறுகளை மிகுதியாகச் செய்கின்ற
தன்மையைப் பெறக்கடவையோ என்றும் பொருள்கொள்ளலாம்.        116