4052.'சிந்தை, நல் அறத்தின் வழிச் சேறலால்,
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்,
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும், எருவைக்கு அரசு அல்லனோ?

     நல்லறத்தின் வழி - நல்ல அற நெறியில்; சிந்தை சேறலால் - மனம்
சென்றதனால்; பைந்தொடித் திருவின் - பசிய (பொன்னாலான) தொடி
என்னும் வளையல்களை அணிந்த திருமகள் போன்ற சீதையின்;
பரிவு ஆற்றுவான் - துன்பத்தை நீக்குதல் பொருட்டு; வெந்தொழில் துறை -
கொடிய போர்த்துறையை மேற்கொண்டு; வீடு பெற்று எய்திய -
(உயிர்துறந்து) மோட்ச உலகை அடைந்த; எந்தையும் - எங்கள் பெரிய
தந்தையாகிய சடாயுவும்; எருவைக்கு அரசு அல்லனோ - கழுகுகளுக்கு
அரசன் அல்லனோ?

     முன் பாடலில் விலங்காகிய ஒரு மதயானை அடைந்த
உயர்நிலையினையும் இந்தப் பாடலில் பறவையாகிய ஒரு கழுகு அடைந்த
நற்கதியையம் கூறுதல் காண்க.  அருணன் மகனாகிய சடாயு, தயரதன்
தோழன்; ஆதலால் சடாயுவைத் தன் தந்தை என்றான் இராமன்.  சடாயுகாண்
படலம், சடாயு உயிர்நீத்த படலங்களில் சடாயு வரலாறு விரித்துரைக்கப்
பெற்றது.

     சடாயு போல வாலியும் சாதாரண விலங்கினத்தைச் சார்ந்தவன் அல்லன்.
எனவே வாலி செய்த குற்றம் பெரிது என இராமன் வற்புறுத்தினான்.  இராமன்
சடாயுவை 'எந்தாயே' (3498) என முன்னரும் விளித்தது காண்க.  சடாயு
தன்னை இழிந்த பிறப்பினனாக் கூறிக் கொண்டதை 'விலங்கு ஆனேன்
ஆதலினால், விலங்கினேன்' (2711) என்ற தொடர் உணர்த்தும்.  முன்பாடலில்
'விலங்கும் விலங்கரோ' என்றும் இப்பாடலில் 'எருவைக்கு அரசு அல்லனோ?'
என்றும் வினவும் முறையில் ஒரே கருத்தை வற்புறுத்திக் கூறும் முறை நயம்
மிக்கதாகும்.  ஆற்றுவான் - வான் ஈற்று வினையெச்சம்.  எந்தையும் - உயர்வு
சிறப்பும்மை.                                                   118