4055. | 'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் - பாலின் ஆற்றிய, பத்தி பயத்தலால், மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். |
காலன் ஆற்றல் கடிந்த - யமனுடைய ஆற்றலை அழித்து வென்ற; கணிச்சியான் பாலின் - மழுவென்னும் ஆயுதத்தை உடைய சிவபிரான் திறத்து; ஆற்றிய பத்தி - நீ ஆற்றிய பக்தி; பயத்தலால்- பயன் தந்ததனால்; மாலினால் தரு - திருமாலால் படைக்கப்பட்ட; வன் பெரு பூதங்கள்-வலிய பெரிய பூதங்கள்; நாலின் ஆற்றலும் - நான்கிற்கும் உள்ள வலிமைகளையெல்லாம்; ஆற்றுழி - உனது வலிமையில்; நண்ணினாய் - பெற்றாய். காலன் - உயிர்களுக்கு விதிக்கப்பட்ட கால எல்லைப்படி உயிரை நீக்குபவன் ஆதலின் யமன் காலன் எனப்பட்டான். வாலி சிறந்த சிவபக்தன் என்பது 'எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று, அட்டமூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்' (3825) என முன்னரும் கூறப்பட்டது. வாலி நான்கு பூதங்களின் வலிமை பெற்றவன் என்பதை 'நிலனும் நீரும் மாநெருப்பும், காற்றும் என்று உலைவு இல் பூதம் நான்குடைய ஆற்றலான்' (3824); ''நீரும் நீர்தரு நெருப்பும் வன்காற்றும் கீழ் நிவந்த, பாரும் சார் வலி படைத்தவன்'' (4000) என்பன உணர்த்தும். கணிச்சியான் காலன் ஆற்றல் கடிந்தவன் - மார்க்கண்டேயனைக் காத்தற் பொருட்டுச் சிவபிரான் காலனை வதைத்தது. ''அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக, வந்த காலன்தன் ஆருயிர் அதனை வவ்வினாய்'' (தேவாரம் - சுந்தரர் - திருப்புன்கூர் - 1) என்றது காண்க. 121 |