4057. | 'இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும், வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்; அனைய தன்மை அறிந்தும், அழித்தனை, மனையின் மாட்சி' என்றான், மனு நீதியான். |
இனையது ஆதலின் - உண்மை இத்தன்மையது ஆதலால்; எக் குலத்து யாவர்க்கும் - எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் எல்லோர்க்கும்; மேன்மையும் கீழ்மையும் - உயர்வும், இழிவும்; வினையினால் வரும் - அவரவர் செய்யும் செயல்களால் வரும். அனைய தன்மை அறிந்தும் - அத்தன்மையை நீ உணர்ந்திருந்தும்; மனையின் மாட்சி- பிறன் மனையாளின் கற்பு மாண்பினை; அழித்தனை - அழித்தாய்; என்றான் - என்று உரைத்தான்; மனு நீதியான் - மனு நீதியில் தவறாதவனாகிய இராமன். நற்செயலால் மேன்மையும் தீச்செயலால் கீழ்மையும் வரும் என்க. மேன்மையும் கீழ்மையும் வினையினால் வரும் என்பது 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' (குறள் - 505) என்னும் குறள்வழி இருத்தல் காண்க. மாட்சி. பெருமை இங்கே சிறப்பினால் கற்பை உணர்த்திற்று. பாவங்கள் பலவற்றுள் பிறன்மனை நயத்தல் என்பது கொடிய பாவமாகும். அத்தகைய கொடிய பாவத்தை வாலி புரிந்ததால், தண்டிக்கத் தான் அம்பு தொடுத்தது குற்றமன்று என இராமன் உணர்த்தினான். 'அறத்தைக் காத்தலாகிய தொழிலில் மனு விதித்த நெறியிலிருந்து இராமன் தவறுபவன் அல்லன் என்பதை அறிவிக்கவே 'மனுநீதியான்' என உரைத்தார். 123 |