'மறைந்து எய்தது ஏன்?' என்ற வாலி வினாவுக்கு இலக்குவன் விடை

ஆசிரிய விருத்தம்

4058. அவ் உரை அமையக் கேட்ட
      அரி குலத்து அரசும், 'மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக! செருக்
      களத்து உருத்து எய்யாதே,
வெவ்விய புளிஞர் என்ன,
      விலங்கியே மறைந்து, வில்லால்
எவ்வியது என்னை?' என்றான்;
      இலக்குவன் இயம்பலுற்றான்:

     அவ்உரை அமையக்கேட்ட - (இராமபிரான் கூறிய) அம் மொழி களை
மனத்தில் பதியுமாறு கேட்ட; அரி குலத்து அரசும் - வானரக் குலத்தின்
தலைவனான வாலியும் (இராமனை நோக்கி); மாண்ட செவ் வியோய் -
மாட்சிமை பொருந்திய நற்குணங்களை உடையவனே; அனையது ஆக - நீ
கூறிய அனைத்தும் உண்மையாகவே ஆகட்டும்; செருக்களத்து -
போர்க்களத்தில்; உருத்து எய்யாதே - என் முன் நின்று அம்பு
தொடுக்காமல்; வெவ்விய புளிஞர் என்ன - கொடிய வேடர்கள் (மறைந்து
நின்று விலங்குகள் மேல் அம்பு தொடுப்பது) போல; விலங்கியே மறைந்து -
விலகி மறைந்து நின்று; வில்லால் எவ்வியது - வில்லைக் கொண்டு என்
மேல் அம்பு செலுத்தியது; என்னை? - என்ன காரணத்தால்; என்றான் -
என்று வினவினான்; இலக்குவன் இயல்பலுற்றான் - (அவ்வினாவிற்கு)
இலக்குவன் மறுமொழி கூறத் தொடங்கினான்.

     அவ்வுரை - குற்றம் புரிந்திலேன் எனக்கூறிய வாலிக்குச் செய்த குற்றம்
இதுவென இராமன் கூறிய மறுமொழி; அமையக் கேட்டல் கூறும் சொற்களை
மனத்தில் பதியுமாறு கேட்டுக் கொள்ளல்.  வாலி தான் செய்த குற்றத்தை
ஏற்றுக் கொண்டான் என்பதை இராமனை 'மாண்ட செவ்வியோய்' என
விளிப்பதிலிருந்தும் 'அனையது ஆக' என்றமையாலும் புலனாகும்.  ஆக -
ஆகுக என்பதன் தொகுத்தல் விகாரம்; வியங்கோள் வினைமுற்று.  புளிஞர்
மறைந்து அம்பு செலுத்துதல் என்பது 'புதல் மறைந்து வேட்டுவன்
புள்சிமிழ்த்தற்று' (குறள் - 274) என்பதால் புலனாம்.

     மறைந்திருந்து அம்பு தொடுப்பானேன் 'என வினவிய வாலிக்கு
இலக்குவன் விடையளிப்பது சிந்திக்கத்தக்கது.  கூறப்படும் காரணம் போலிச்
சமாதானமாகப் பொருத்தமற்றதாக இருக்கப்போவதால் இலக்குவன் பேச்சாக
ஆசிரியர் வைத்தார் என்பர்.  அறிவில் சிறந்த ஆதிசேடனின் அமிசமாதலின்
அவனை விடை சொல்ல வைத்தார் என்றும் கூறுவர்.  விலங்குகளை
வேடர்கள் மறைந்திருந்தும் வேட்டையாடுவார்.  விலங்காகிய வாலியை
மறைந்திருந்து கொன்றது தவறில்லை என வான்மீக இராமன் அமைதி
கூறுவான்.  கம்பர் வாலி வாக்கில் அக்கருத்தை ஓர்உவமையாக்கினார். 124