4059.'முன்பு, நின் தம்பி வந்து
      சரண் புக, ''முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்'' என்று
      செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி,
      ''அடைக்கலம் யானும்'' என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து
     நின்ற எய்தது' என்றான்.

     நின் தம்பி முன்பு வந்து - உன் தம்பியான சுக்கிரீவன் முதலில் வந்து;
சரண்புக -
சரண் அடைய; முறை இலோயை - முறை தவறிய உன்னை;
தென் புலத்து உய்ப்பென் -
தென்திசையிலுள்ள யமனுலகில் செலுத்துவேன்;
என்று செப்பினன் -
என்று (என் தமையன்) உறுதிமொழி கூறினான்;
செருவில் -
போர்க்களத்தில்; நீயும் உயிருக்கு அன்பினைஆகி - நீயும்
உன் உயிர்மீது பற்றுடையவனாகி; யானும் என்றி - 'நானும் உனக்கு
அடைக்கலமாவேன்' என்று கூறுவாய்; என்பது கருதி - என்பதையே
எண்ணியே; அண்ணல் - பெருமைக்குரிய இராமன்; மறைந்து நின்று - உன்
எதிரில் வராமல் மறைவாக நின்று; எய்தது - உன்மீது அம்பு செலுத்தியதாகும்;
என்றான் -
என்று (இலக்குவன் வாலிக்கு) விடை அளித்தான்.

     சுக்கிரீவன் முதலில் வந்து சரண் வேண்டியதால் அவனைக் காக்கும்
பொறுப்பும், முறையில செய்தமையால் வாலியைத் தண்டிக்கவேண்டிய
பொறுப்பும் இராமனைச் சார்ந்தவனாயின.  இந்நிலையில் வாலியும் அபயம்
வேண்டின்.  அவனைத் தண்டிக்க முடியாமல் போவதோடு, தான்
சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கும் தவறிப்போம்.  அதனால் வாலியின்
முன்னர் வரவில்லை என இலக்குவன் விளக்கினான்.  இராமன் வாலியோடு
போர்செய்யவில்லை என்றும், அவன் செய்த தீச் செயலுக்கே தண்டனை
அளித்தான் என்றும், தண்டனையை எந்த வகையிலும் நிறைவேற்றலாம்
என்றும் உணர்த்தினான் என்பதாம்.  வாலியை 'முறை இலோயை' என்றது
தம்பி மனைவியைக் கவர்ந்தமையாலாகும்.  தென்புலம்
தெற்குத் திசையிலுள்ள யமன் உலகம்.  என்றி - முன்னிலை ஒருமை
வினைமுற்று - இகர விகுதி எதிர்காலம் காட்டிற்று.                  125