வாலியின் மனமாற்றம் 4060. | கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்; அவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல்' என்பது எண்ணினன் பொருந்தி, முன்னே செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: |
கவி குலத்து அரசும் - குரங்குகள் கூட்டத்திற்க அரசனுமான வாலி; அன்ன கட்டுரை - (முற்பாடல்களில் கூறப்பட்ட) உரையாடலை; கருத்தில் கொண்டான் - தன் மனத்தில கொண்டவனாய்; அவியுறு மனத்தன் ஆகி - அடங்கியொழுகும் உள்ளத்தனாகி; புவியுடை அண்ணல் - 'உலகம் முழுதுமுடைய பெருமைக்குரிய இராமன்; அறத்திறன் அழியச் செய்யான் - அறநெறி அழியுமாறு செயல்களைச் செய்ய மாட்டான்'; என்பது எண்ணினேன் - என்பதைக் கருதியவனாகி; பொருந்தி - மனம் பொருந்தி; முன்னே செவியுறு கேள்விச்செல்வன் - முன்னமே செவியிற் பொருந்தும் வேத நாயகனை; சென்னியின் இறைஞ்சி - தலையினால் வணங்கி; சொன்னான் - பின்வருமாறு சொல்பவனானான். கேள்வி - வேதம். வேதப் பொருள்களின் முடிவானவனாகிய இராமனைக் கேள்விச் செல்வன் என்றார். செவியுறு கேள்விச் செல்வன் எனச்சிறப்பிக்கப்பட்டவன் வாலி என்பாரும் உளர். கேள்விச் செல்வத்தால் அறிவு பெற்றமையால்தான் இராமன் கூறியவற்றைக் கருத்தில் கொள்ள முடிந்தது என்பது அவர்கள் விளக்கம். கேள்விச் செல்வம் உடைமையால் அவியுறு மனத்தனாயினன். இராமன் தவறு செய்யான் என எண்ணவும் இயன்றது அதனால் என்க. தவறு உணர்ந்த வாலி இராமன் பெருமையையும் உணர்ந்ததாலும் அடங்கி ஒழுகும் உள்ளம் பெற்றான் என்பதை 'அவியுறு மனத்தன் ஆகி' என்ற தொடர் உணர்த்தும். இராமன்மீது கொண்ட மதிப்பால், கீழே விழுந்து இராமனை வணங்க முடியாத நிலையில் தலையால் வணங்கினான். வாலி இராமனுடைய குணச்சிறப்புகளை முன்னரே ஒருவாறு அறிந்திருந்தாலும் தான் என்ற செருக்காலும், தன்னலத்தாலும் மறைக்கப்பட்டு இராமனை இழித்துரைத்தான். பின் இராமன் கூறிய மொழிகளால் அவனது அஞ்ஞானம் நீங்க நல்லறிவு பெற்றான் எனலாம். அன்ன கட்டுரை என்பதற்கு இலக்குவன் கூறிய சொற்கள் என்று கூறுவாரும் உளர் அப் பொருளில் சிறப்பு இன்மையை யாவரும் எளிதில் அறிய முடியும். இதனால் ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும் ஒரு ஞானாசிரியரின் உபதேசம் பெற்றாலொழிய உண்மைத் தத்துவத்தை உணர முடியாது என்பது விளங்குதல் காண்க. 126 |