இராமனைத் துதித்து, வாலி ஓர் வரம் வேண்டுதல்

கலிவிருத்தம்

4063. 'ஏவு கூர் வாளியால்
      எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
      அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
      முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
      பகையும் நீ! உறவும் நீ!

     ஏவுகூர் வாளியால் - '(வில்லில் தொடுத்துச்) செலுத்தப்படும் கூரிய
அம்பை; எய்து - (என்மேற்) செலுத்தி; நாய் அடியனேன் - நாய் போன்ற
சடைப்பட்டவனான அடியேனது; ஆவிபோம் வேலை வாய் - உயிர் நீங்கும்
சமயத்தில்; அறிவு தந்து அருளினாய் - மெய்யுணர்வு தந்து அருள்
செய்தாய்; மூவர் நீ - (நான்முகன், திருமால், உருத்திரன் எனும்)
மும்மூர்த்திகளும் நீயே; முதல்வன் நீ - (அம்மூவர்க்கும் மேலோனாகிய)
முழுமுதற் கடவுளும் நீயே; முற்றும் நீ - உலகில் உள்ள எல்லாப்
பொருள்களும் நீயே; மற்றும் நீ - மற்றும் எல்லாமும் நீயே; பாவம் நீ -
பாவமும் நீயே; தருமம் நீ - அறம் என்பதும் நீயே; பகையும் நீ -
பகைவனும் நீயே; உறவும் நீ - உறவு உடையவனும் நீயே;

     இராமன் வாலியை அம்பு செலுத்தித் தண்டித்தாலும் உயிர் போகும்
நிலையில் மெய்யுணர்வை அளித்ததால் தன்னை நாயடியேன் எனத் தாழ்த்திக்
கொண்டு 'ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்' என இராமன்
கருணையைப் பாராட்டித் தொழத் தொடங்கினான்.  நாய் - தாழ்நிலை,
நன்றியுடைமை இரண்டையும் ஈண்டுக் குறித்தது.  தன்னையுடையவன்
தன்னைத் தண்டித்த போதும் தொடரும் நாய் போல, வாலியும் இராமன்
ஒறுத்த போதும் அவனையே பற்றுக் கோடாக் கொண்டனன். 'எறிந்த வேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய்' (நாலடி - 213) என்பது காண்க.

     உலகினைப் படைக்கும் நான்முகனாகவும், காத்தலைச் செய்யும்
திருமாலாகவும், அழித்தலைச் செய்யும் உருத்திர மூர்த்தியாகவும் விளங்குபவன்
பரம்பொருளாகிய இராமனே என்பான் 'மூவர் நீ' என்றான்; அம்மூவர்க்கும்
முதல்வனாகிய முழுமுதற் கடவுள் எனத் தெளிந்து கொண்டதால் 'முதல்வன்
நீ' என்றான்.  'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்றபடி எல்லாப் பொருள்களின்
உள்ளும் புறமும் கலந்து இருத்தலால் முற்றும் நீ மற்றும் நீ' என்றான்.  தமிழ்ச்
சொல்லாகிய இறைவன் என்பதன் பகுதி 'இறு' எனக் கொண்டு, இதே பொருள்
கொள்வர்? (விஷ்ணு என்ற சொல்லே எங்கும் நிறைந்தது என்னும் பொருள்
உடையது.) இத்தொடர்க்கு 'அறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் நீயே,
அறியப்படாத மற்றைப் பொருள்களும் நீயே' என்றும் பொருள் உரைப்பர்.
உயிர்கள் தீவினை செய்யும் நிலையில் பாவமாகவும், நல்வினை செய்கையில்
புண்ணியமாகவும் இருந்து நுகர்விப்பவனும் இறைவனே; ஆதலின், 'பாவம் நீ,
தருமம் நீ என்றான்.  குற்றம் புரிந்த தீவினையாளரைச் சினம் கொண்டு
தண்டிக்கையில் பகைவனாகவும், நற்குணம் படைத்தாரிடத்து அருள்
கொள்வதால் 'உறவினனாகவும் விளங்கும் இருவகைப் பண்பும் இராமனிடம்
இருப்பதால், 'பகையும் நீ உறவும் நீ' என்றான்.  இறைவன் பகைவனாய் வந்து
தண்டிப்பதும் அவன் குற்றம் நீக்கி அவனுக்க உறவாகி அருள் செய்தல்
பொருட்டே; ஆதலால் முதலில் பகையைக் கூறி முடிந்த பயனாக உறவினைக்
கூறிய நயம் காண்க.  'புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்'
(திருவாய்மொழி - 6.3.4), 'நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்

கமுமாய், வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய், பல் வகையும் பரந்த
பெருமான்' (6-3-1) என்று நம்மாழ்வார் கூறுவன ஒப்புநோக்கத்தக்கன.
இராமன் பெருமையை வாலி போற்றியது போல விராதன், கவந்தன்
முதலானோர் போற்றியதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.  ''நீ ஆதி முதல்
தாதை'', ''நீ ஆதி பரம்பரமும்'' (2568, 69); ஆதிப் பிரமனும் நீ? ஆதிப்
பரமனும் நீ! 'ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ' (3685)
என்பன காண்க.                                           129