4065. | ''யாவரும் எவையும் ஆய், இருதுவும் பயனும் ஆய், பூவும் நல் வெறியும் ஒத்து; ஒருவ அரும் பொதுமையாய் ஆவன் நீ ஆவது'' என்று அறிவினார் அருளினார்; தா அரும் பதம் எனக்கு அருமையோ? தனிமையோய்! |
தனிமையோய் - ஒப்பற்ற தனி முதல்வனே; யாவரும் - எல்லா உயர்திணைப் பொருள்களும்; எவையும் ஆய் - எல்லா அஃறிணைப் பொருள்களும் ஆகி; இருதுவும் பயனும் ஆய் - அறுவகைப் பருவங்களும், அவற்றின் பயன்களம் ஆகி; பூவும் நல்வெறியும் ஒத்து - மலரும் அதனிடத்துள்ள நல் வாசனையும் ஒத்து; ஒருவ அரும் பொதுமையாய் - பிரிக்க இயலாத வகையில் கலந்து எல்லாப் பொருளிலும் பொதுவாயுள்ளவனே! நீ ஆவன் ஆவது என்று - நீ யாவன் என்பதும் நின் இயல்பு; எத்தகையது என்றும்; அறிவினார் அருளினார் - (என்னுள் தோன்றிய) நல்லறிவு எனக்கு விளங்க அறிவுறுத்தியருளியது. தா அரும் பதம் - (இனி) கெடுதல் இல்லாத கிடைத்தற்குரிய வீடு பேற்றின்பம்; எனக்கு அருமையோ - எனக்குக் கிடைப்பது அருமையாமோ? (ஆகாது). யாவரும் என்றது மக்கள், தேவர் நரகரயைும், எவையும் என்றது மற்ற உயிர் உள்ளவற்றையும் உயிர் இல்லாதவற்றையும் குறிக்கும். இறைவன் உயிருடையன, உயிர் இல்லாதன ஆகிய எல்லாப் பொருள்களோடும் நீக்கமறக் கலந்து நிற்றலால் 'யாவரும் எவையும் ஆய்' என்றான். இருது - இரண்டு மாதம் கொண்ட காலப் பகுதி. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனிலைக் குறிக்கும் காரணங்களும் காரியங்களும் அவனே என்பதை 'இருதுவும் பயனும்' என்ற தொடர் உணர்த்தும். இறைவன் எல்லாமாய் இருக்கும் தன்மையை நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் ''யாவையும் எவரும் தானாய்'' (3:4.10) எனப்ர். ''பூவும் நல்வெறியும் ஒத்து ஒருவு அரு - மலரில் மணம் போல இறைவன் எல்லாப் பொருள்களிலும் எங்கும் பிரிக்கமுடியாமல் பரந்திருக்கும் நிலை. இழிந்த பொருளாயினும் உயர் பொருளாயினும் வேறுபாடின்றி ஒரு தன்மையனாய் இறைவன் இருத்தல் பற்றிப் 'பொதுமையாய்' எனப் போற்றினான். தன்னுடன் பகைமை நிலையில் வந்த இராமன் யாவன் என்பதும் அவனது உண்மை இயல்பு இத்தகைத்து என்றும் அவன் அருள் தன்னுள் இருந்த மெய்யுணர்வை இப்போது விளங்கிக்கொள்ள அறிவுறுத்தியதால் 'அறிவினார் அருளினார்' என்றான். அறிவின் சிறப்பு நோக்கி 'அறிவினார்' என உயர்திணையாக்கிக் கூறினான். இராமன் பரம்பொருள் என்னும் உண்மை அறிவைப் பெற்றதால் இனிப் பரமபதம் கிடைப்பது எளிது என்பானாய்த் 'தாவரும் பதம் எனக்கு அருமையோ?' என்றான் 'வான் நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப' என்ற அயோதியா காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடலை ஈண்டு ஒப்பு நோக்கலாம். 131 |