4066. | 'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நிற் கண்டு கொண்டேன்; இனிக் காண என் கடவெனோ? பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத் தண்டமே; அடியனேற்கு உறு பதம் தருவதே! |
உண்டு எனும் - (என்றும் அழிவற்றதாய்) உள்ளது என்று கூறப்படுகின்ற; தருமமே - அறத்தையே; உருவமா உடைய - வடிவமாகக் கொண்டு நின்ற; நிற்கண்டு கொண்டேன்- உன்னைக் (கண்களால்) கண்டு கொண்டேன்; இனிக் காண என் கடவெனோ - இனிமேல் காண்பதற்கு வேறொன்றை உடையவன் ஆவனோ? (வேறொன்றைக் காணக் கடவேன் அல்லன்); என் பெரும் பழவினை - பெரியதும் தொன்று தொட்டு வருவதுமான எனது வினை; பண்டொடு இன்று அளவுமே - முன்னே தொடங்கி இன்று வரையில் மட்டுமே உள்ளது; (இனி இல்லை); தண்டமே - (என் தீவினைச் செயலுக்கு) நீ அளித்த தண்டனையே; அடியனேற்கு - அடியேனாகிய எனக்கு; உறுபதம் தருவதே - வீடுபேறாகிய பெரும்பதத்தைத் தருவதாகும். இராமன் தருமத்தின் வடிவமாக வந்தவன், 'தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ' (3966), 'மெய்யற மூர்த்தி வில்லோன்' (5882) என்ற வாலி, அனுமன் கூற்றுக்கள் காண்க. 'உயர்தனிப் பொருளாம் இராமனைக் கண்ட பின்னர் உலகில் காண்பதற்கு வேறொரு பொருள் இல்லையாதலின் 'நின் கண்டனென் மற்றினிக் காணக் கடவனோ?' என்றான். 'அண்டர்கோன் அண அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' (அமலனாதி பிரான் - 10) என்பர் திருப்பாணாழ்வார். பிறப்பு அநாதியாய் வருவதால் பல பிறப்புகளில் காரணகாரியத் தொடர்ச்சியாய்ச் செய்து சேர்க்கப்பட்ட வினைகள் 'பெரும் பழவினை' எனப்பட்டது. அனுபவித்த (ஸஞ்சிதம்), அனுபவிக்கின்ற (பிராப்தம்), அனுபவிக்கவிருக்கும் (ஆகாமியம்), வினைப் பயன்கள் அனைத்தும் இராமனைக் கண்டதும் கதிரவன் முன் பனிபோல் விலகியதால் 'பண்டொடு இன்றளவுமே என் பெரும் பழவினை' என்றான். தண்டம் - தண்டனை. நால்வகை உபாயங்களுள் இது நான்காவது. இறைவன் அளிக்கும் தண்டனையும் மறக்கருணையின் பாற்படுமாதலின், இறைவன் அளிக்கும் தண்டனையும் மறக்கரு ணையின் பாற்படுமாதலின், இறைவனால் கொல்லப்பட்டவர் வீடுபேறு அடைவர் என்னும் உறுதி பற்றித் 'தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே' என்றான். ''கழிப்பருங் கணக்கில் தீமை வைகலும் புரிந்துளாரும் வான் உயர்நிலையை வள்ளல், எய்தவர் பெருவர்'' (4075) என்ற அடிகளும் இவ் உண்மையை உணர்த்தும். தண்டமே - ஏகாரம் தேற்றம். உறுபதம் - உறு மிகுதிப் பொருளை உணர்த்தும்உரிச்சொல். 132 ஆசிரியவிருத்தம் |