4067. | 'மற்று இனி உதவி உண்டோ? - வானினும் உயர்ந்த மானக் கொற்றவ! - நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து, தொல்லைச் சிற்றினக் குரங்கினோடும் தெரிவு உறச் செய்த செய்கை, வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான். |
வானினும் உயர்ந்த மானக் கொற்றவ - வானத்தைக் காட்டிலும் உயர்ந்த பெருமையை உடைய வெற்றி வேந்தனே; எம்பி - என் தம்பியாகிய சுக்கிரீவன்; என்னைக் கொல்லிய - என்னைக் கொல்லுதல் பொருட்டு; நின்னைக் கொணர்ந்து - உன்னை அழைத்துக் கொண்டு வந்து; தொல்லைச் சிற்றினக் குரக்கினோடும் - தொன்று தொட்டுச் சிறுமையுடையதாய் வரும் குரங்கினத்தோடு; தெரிவு உறச் செய்த செய்கை - ஆலோசனை செய்த செயலால்; வெற்று அரசு எய்தி - பயனில்லாத அரசாட்சியைத் தான் அடைந்து; வீட்டு அரசு எனக்கு விட்டான் - (உயர்ந்த உலகமாகிய) வீட்டுலக அரசாட்சியை எனக்கு அளித்துவிட்டான்; இனி மற்று உதவி உண்டோ - இனிமேல் இதனினும் மேலான உதவி அவன் எனக்குச் செய்யக் கூடிய தொன்று உண்டோ? மற்றுள்ள பூதங்கள் நான்கினும் பெருமையாலும், பழமையாலும், அப்பூதங்கள் உண்டாவதற்க இடமாய் நின்றமையாலும் உயர்வானதாகக் கருதப்படும் அத்தகைய வானத்தைக் காட்டிலும் இராமனது பெருமை சிறப்புடைத்து ஆதலின் 'வானினும் உயர்ந்த மானக் கொற்றவ' எனப் போற்றினான், மனித உணர்வின் எல்லை வானமே; அதனினும் உயர்வுடையதாய்ச் சிந்தையும் மொழியும் செல்லா நிலையுடைய பரம்பொருள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அறிவுக் குறைவும், நிலை திரிந்து துளங்கும் அறிவும், திரிபுணர்ச்சியும் ஆகிய சிறுமைப் பண்புகளைப் பண்டுதொட்டு மாறாது பெற்றுள்ள குரங்கின் இனம் என்பதைக் குறிக்கத் 'தொல்லைச் சிற்றினக் குரங்கு' என்றான். தன் தம்பி பயனில்லாத ஆட்சியைப் பெற்றுத் தனக்கு அழிவில்லாத துறக்க உலக ஆட்சியைப் பெற்றுக் கொடுத்தான் என வாலி கூறியதனால் அவனுக்குத் தம்பியின் மீதிருந்த பகைமை மாறியது பெறப்பட்டது. குற்றத்தைக் குணமாகக் கூறியதால் இலேச அணியும், வெற்றரசை ஏற்றுக் கொண்டு விட்டரசு கொடுத்தான் என வருதலால் பரிவருத்தனை அணியும் பாடலில் அமைந்துள்ளன. மற்றினி உதவி உண்டோ என வாலி கூறியது போல ''எம்முனார் எனக்குச் செய்த உதவி'' (6499) என வீடணன் கூறுதல் காண்க. 133 |