4068. | 'ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்; பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில், தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான். |
ஓவிய உருவ - சித்திரத்தில் வரைந்ததுபோல அழகிய வடிவம் உடையவனே!நாயேன் - நாய் போல் சிறுமையுடையேனாகிய நான்; உன்பால் பெறுவது ஒன்று உளது - உன்னிடத்தில் வேண்டிப் பெறுவதொன்று உள்ளது; பூ இயல் நறவம் மாந்தி - மலர்களில் உண்டாகும் மதுவைக் குடித்து; புந்தி வேறு உற்ற போழ்தில் - அறிவு திரிந்த நிலைமையில்; தீவினை இயற்றுமேனும் - செய்யத்தகாத தீய காரியங்களைச் செய்வானாயினம்; எம்பிமேல் சீறி - என் தம்பி மேல் சினங் கொண்டு; என்மேல் ஏவிய - என் மேல் செலுத்திய; பகழி என்னும் கூற்றினை - அம்பு என்கின்ற யமனை; ஏவல் - (அவன்மீது) செலுத்துதல் வேண்டா; என்றான் - என்று (இராமனிடம்) வேண்டினான். வாலிக்குத் தன் தம்பி மீதுள்ள அன்பையும் அவன் இயலபை அறிந்திருந்த தன்மையையும் இப்பாடல் உணர்த்தும். சுக்கிரீவன் தவறு செய்யினும் தன்மீது அம்பு செலுத்தியது போல் அவன்மீதும் செலுத்தவேண்டா என வேண்டுவது சிறியன சிந்தியாதானாகிய வாலியின் பெருந்தன்மையினையும் அன்பையும் காட்டுகிறது. இராமனின் பேரழகு 'ஓவிய உருவ' என்னும் தொடரில் உணர்த்தப்படுகிறது. நறவம் மாந்துதல் வானரங்களின் இயல்பாகும். பின்னர்ச் சுக்கிரீவன் கள்ளுண்டு களித்து இராமனுக்குக் கொடுத்த வாக்கை மறப்பதைக் காண்கிறோம். அதைமுன் கூட்டியே வாலி வழி அறிவிக்கும் நயம் காண்க. சுக்கிரீவன் இயல்பினால் எப்போழுதும் தீவினை செய்யமாட்டான் என்பதை, 'இயற்றுமேனும்' என்பதிலுள்ள உம்மை உணர்த்தும். உம்மை எதிர்மறை. வடிவத்தால் அம்பு போலத் தோன்றினாலும் அழிப்பதில் கூற்றுவவனப் போன்றதால் 'பகழி என்னும் கூற்றினை' என்றான். உருவக அணி. போழ்து - பொழுது என்பதன் விகாரம். 'சீறி' என்பது இடைநிலை விலக்கணியாகி, ''என்மேல் சீறி'', 'எம்பிமேல் சீறி' என இரண்டிடத்தும் இயைதற்கு உரியது. 134 |