4069. | 'இன்னம் ஒன்று இரப்பது உண்டால்; எம்பியை, உம்பிமார்கள் ''தன்முனைக் கொல்வித்தான்'' என்று இகழ்வரேல், தடுத்தி, தக்கோய்! முன்முனே மொழிந்தாய் அன்றே, இவன் குறை முடிப்பது ஐயா! பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ? |
இன்னம் இரப்பது ஒன்று உண்டு - இன்னமும் யான் உன்னிடம் வேண்டிப் பெறத்தக்கதோர் வரம் உள்ளது. எம்பியை - (அது யாதெனில்) என்னுடைய தம்பி சுக்கிரீவனை; உம்பிமார்கள் - உன்னுடைய தம்பியர்; தன்முனைக் கொல்வித்தான் - 'இவன் தமையனைக் கொல்லச் செய்தவன்'; என்று இகழ்வரேல் - என்று பழிப்பார்களானால்; தடுத்தி - நீ அவர்களைத் தடுப்பாயாக; தக்கோய் - மேன்மைக் குணம் உடையவனே! ஐயா - ஐயனே! இவன் குறை முடிப்பது - இவனுக்குள்ள குறைகளை முடித்து வைப்பதாக; முன்முனே மொழிந்தாய் அன்றே - முன்னமே நீ உடன்பட்டுக் கூறியுள்ளாய் அல்லவா? பின் - (அதற்குப்) பிறகு; இவன் வினையின் செய்கை அதனையும் - இச் சுக்கிரீவன் (நினக்குச் செய்ய வேண்டிய) வினையின் செயற்பாடுகளை; பிழைக்கல் ஆமோ - செய்யாது விடலாகுமோ? இராமனின் தம்பியர் தமையனாகிய இராமன்மாட்டு அன்பு கொண்டவர்களாதலின் அந்த அன்பு மனத்தால் தன்னைக் கொல்ல வைத்த சுக்கிரீவனைப் பழிக்கக் கூடும் என்று உணர்ந்து, அந்தப் பழிச் சொல்லும் தம்பிக்கு வரக்கூடாது என்பதால் 'எம்பியை உம்பிமார்கள் தம்முனைக் கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி' என வேண்டினான். இதில் வாலியின் பெருந்தன்மை புலனாகிறது. தக்கோய் - நடுவுநிலை முதலிய நல்ல 'குணங்களை உடையவனே, ஐயா என்ற விளி இரந்து வேணடும் நிலையைப் புலப்படுத்தியது. இங்ஙனமே கும்ப கர்ணன் தன் தம்பி வீடணனுக்காக வேண்டிய பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. ''தம்பியென நினைந்து, இரங்கித் தவிரான், அத்தகவு இல்லா நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும். இறை நல்கானால் உம்பியைத் தான், உன்னைத் தான் அனுமனைத்தான், ஒரு பொழுதும் எம்பி பிரியானாக அருளுதி, யான் வேண்டினேன்''. (7627) இவன் குறை முடிப்பதாவது வாலியைக் கொன்று அரசளித்தலாகும். பின்பு - அக்குறையை முடித்தபின்பு. இவன் வினையின் செய்கை என்றது சீதை உள்ள இடம் தேடி, அவளை மீட்டற்குரிய செயல்களைச் செய்வதாகும். இராமன் சுக்கிரீவனுக்கு உறுதி கூறிய வண்ணம் உதவி செய்த பின்னர்ச் சுக்கிரீவனால் தனக்கு ஆகவேண்டிய காரியத்தையும் தவறவிடல் கூடாது என வாலி இராமனுக்குக் கூறினான். 135 |