அனுமன் ஆற்றல் பற்றி இராமனுக்குக் கூறுதல்

4070. 'மற்று இலேன் எனினும், மாய
      அரக்கனை வாலின் பற்றி,
கொற்றவ! நின்கண் தந்து,
     குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலேன்; கடந்த சொல்லின், பயன்
      இலை; பிறிது ஒன்றேனும்,
''உற்றது செய்க!'' என்றாலும், உரியன்
      இவ் அனுமன் என்றான்.

     கொற்றவ - வெற்றியை உடையவனே!மற்று இலேன் எனினும் -
உனக்கு வேறொரு பேருதவியைச் செய்யும் பேறு பெற்றிலேன் ஆயினும்; மாய
அரக்கனை -
வஞ்சனையில் வல்ல அரக்கனான இராவணனை; வாலின்
பற்றி-
என் வாலினால் சுற்றிப் பிடித்து; நின்கண் தந்து - உன்னிடம்
கொணர்ந்துஒப்புவித்து; குரக்கு இயல் தொழிலும் - ஒரு குரங்காகிய
எனக்கு இயன்றதொழிலையாவது; காட்டப் பெற்றிலேன் - செய்து காட்டும்
பேறுபெறவில்லை; கடந்த சொல்லின் -  நிகழ்ந்தது போனவற்றைச்
சொல்வதால்; பயன் இலை - ஒரு பயனம் இல்லை; உற்றது செய்க
என்றாலும் -
நிகழும் இச்செயலைச் செய்வாயாக என்றாலும்; பிறிது
ஒன்றேனும் -
அன்றி வேறொரு செயலைச் செய்க என்றாலும்; இவ்
அனுமன் உரியன் -
(அதனைச் செய்து முடித்தற்கு) இந்த அனுமன்
உரிய தகுதி உடையவன் ஆவான்; என்றான் - என்று வாலி
இராமனுக்கு உறுதி கூறினான்.

     இராவணனை வென்று அவனை வாலில் சுற்றி இராமனிடம் ஒப்படைக்க
முடியாமைக்கு வாலி வருந்தினான். கழிந்த செயல்களுக்காக இரங்குதல்
பயனற்றுப் போவதால் 'கடந்த சொல்லின் பயனில்லை' என்றான்.  குரக்கு
இயல் தொழில் - விரைந்து தாவிச் சென்று பற்றி விடாப்பிடியாகக் கொணர்தல்
- 'குரங்குப்பிடி' என்பது உலக வழக்கு.  சுக்கிரீவன் மாட்டுப் பகைமை நீங்கி
வாலி இரக்கம் கொண்டது போல, அனுமனின் திறமையை வெளிப்படுத்திப்
பேசியதும் அவனது நல்ல பண்பைக் காட்டுகிறது.  அனுமன் ஆற்றலை
அவன் நன்கு அறிந்திருந்தனன் என்பதும்புலனாகிறது.              136