4071.'அனுமன் என்பவனை - ஆழி
      ஐய! - நின் செய்ய செங் கைத்
தனு என நினைதி; மற்று, என்
      தம்பி நின் தம்பி ஆக
நினைதி; ஓர் துணைவர் இன்னோர்
      அனையவர் இலை; நீ, ஈண்டு, அவ்
வனிதையை நாடிக் கோடி -
      வானினும் உயர்ந்த தோளாய்!'

ஆழி ஐய - சக்கராயுதத்தை உடைய தலைவனே!வானினும் உயர்ந்த
தோளாய் -
வானத்தை விட உயர்ந்த தோள்களை உடையவனே!அனுமன்
என்பவனை -
அனுமனை; நின் செய்ய செங்கை - உனது அழகிய சிவந்த
கையில் ஏந்தியுள்ள; தனு என நினைதி - வில்லாகிய கோதண்டமே என
நினைப்பாயாக. மற்று - மேலும்; என் தம்பி நின் தம்பி ஆக நினைதி -
என் தம்பி சுக்கிரீவனை உன் தம்பியருள் ஒருவனாக நினைப்பாயாக;
இன்னோர் அனையவர் ஒர் துணைவர் இலை -
இவர்களைப்
போன்றவர்களாய் ஒப்பற்ற துணைவர்கள் வேறு பிறர் இலர்; நீ - ; ஈண்டு -
இவர்களைத் துணையாகக் கொண்டு; அவ்வனிதையை நாடிக் கோடி -
அந்தச் சீதாபிராட்டியைத் தேடிக் கொள்வாயாக.

     ஆழி ஐய - ஆணைச் சக்கரத்தை உடைய தலைவனே எனப் பொருள்
கொளலும் பொருந்தும்.  வானினும் உயர்ந்த தோளாய் என்ற தொடர்க்கு
'வானினும் உயர்ந்த மானக் கொற்றவ' (4067) என்ற இடத்துத் தந்த
விளக்கத்தை நோக்குக.  நின் தம்பியாக - என்றும் பிரியாத இலக்குவனாக
எனவும் கொள்ளலாம்.  கையினின்று வில் நீங்காது நல்லோரைக் காத்து
அல்லாரை அழித்துத் துணையாவது போல் அனுமன துணையாவன் என்பதால்
'அனுமன் என்பவனை நின் செய்ய செங்கைத் தனு என நினைதி' என்றான்.
தமையனைப் பிரிந்து சுக்கிரீவன் வருந்துவானாதலின்
அத்துன்பம் போக்க அவனையும் தம்பியாக ஏற்குமாறுவேண்டினான்.
அவர்கள் ஆற்றலையும் உணர்த்துவானாய் ''ஓர் துணைவர்
இன்னோர் அனையவர் இலை'' என்றான்.  இங்கு அனுமனை இராமன்
கைத்தனு எனக் கூறிய சிறப்பைக் காண்க.                         137