சுக்கிரீவனுக்கு வாலி புகன்ற அறவுரை

4072. என்று, அவற்கு இயம்பி, பின்னர்,
      இருந்தனன் இளவல் தன்னை
வன் துணைத் தடக் கை
      நீட்டி வாங்கினன் தழுவி, 'மைந்த!
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்;
      உறுதி அஃது உணர்ந்து கோடி;
குன்றினும் உயர்ந்த தோளாய்!
      வருந்தலை!' என்று கூறும்:

     என்று அவற்கு இயம்பி - என்று (வாலி) அந்த இராமனுக்குக் கூறி;
பின்னர் -
அவனுக்குப் பின்னே; இருந்தனன் இளவல் தன்னை -
(வருத்தத்துடன்) இருந்தவனாகிய தன் தம்பி சுக்கிரீவனை; வன் துணைத்
தடக்கை நீட்டி -
வலிய இரண்டு பெரிய கைகளையும் நீட்டி; வாங்கினன்
தழுவி -
சேர்த்து அணைத்துக் கொண்டு; 'மைந்த - மைந்தனே!குன்றினும்
உயர்ந்த தோளாய்! -
மலையினும் உயர்ந்த தோள்களை உடையவனே!
உனக்கு உரைப்பது -
உனக்குச் சொல்வதான; உறுதி ஒன்று உண்டு -
நன்மை தரும் காரியம் ஒன்று உள்ளது; அஃது உணர்ந்து கோடி - அதனை
நீ உணர்ந்து ஏற்றுக் கொள்வாயாக; வருந்தலை - (எனது இறப்பினை எண்ணி)
வருந்தாதே'; என்று கூறும் - என்று கூறி மேலும் கூறுவான்.

     பின்னர் இருந்தனன்.  தன் செயலுக்கு வெட்கமுற்று முன் வரத் தயங்கி
இருந்தனன் எனலாம்.  பின்னர் - அதன் பிறகு எனவும் பொருள்
கொள்ளலாம். தமையன் தந்தையோடு ஒப்பவனாதால், மகனொடு ஒப்பவனான
தம்பியை 'மைந்த' என அன்பின் மிகுதியால் விளித்தான்.  வருந்தலை -
முன்னிலை எதிர்மறை வினைமுற்று.                              138