4073. | 'மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத் துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி, அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது; இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். |
எண்ணம் மிக்கோய் - ஆலோசனையில் சிறந்தவனே!மறைகளும் - வேதங்களும்; முனிவர் யாரும் - எல்லா முனிவர்களும்; மலர்மிசை அயனும்- தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும்; மற்றைத் துறைகளின் முடிவும்- மற்ற சாத்திரங்களின் முடிபுகளும்; சொல்லும் துணி பொருள் - சொல்லுகின்ற தேர்ந்த பொருளாகிய பரம்பொருள்; துணிவில் தூக்கி - (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு; அறை கழல் இராமன் ஆகி - ஒலிக்கின்ற கழலணிந்த இராம பிரானாகிய; அறநெறி நிறுத்த வந்தது- உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்து உள்ளது. இறைஒரு சங்கை இன்றி - இவ்வுண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல்; எண்ணுதி - மனத்தில் கொள்வாய். அழித்தற்கரிய தன்னைக் கொல்ல நல்ல துணைவனைச் சுக்கிரீவன் தன் ஆலோசனைத் திறத்தால் பெற்றவனாதலின் 'எண்ணம் மிக்கோய்' என வாலி விளித்தான். பரம்பொருளே இராமனாக வந்துள்ளான் என வாலி சுக்கிரீவனுக்கு உணர்த்தினான். இக்கருத்து நூலின் பல இடங்களில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் உணர்த்தப்பட்டுள்ளது. ''காலமாக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலமாய் முடிவு இலாத மூர்த்தி இம் முன்பன்'' (1585) ''மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் - கை வில் ஏந்தி . . . . . அயோத்தி வந்தான்'' (5884) என வரும் இந்நூலின் அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 139 |