4075.'கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப
      அருங் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும், வான்
      உயர் நிலையை, வள்ளல்
எய்தவர் பெறுவர்என்றால், இணை
      அடி இறைஞ்சி, ஏவல்
செய்தவர் பெறுவது, ஐயா! செப்பல்
      ஆம் சீர்மைத்து ஆமோ?

     ஐயா - ஐயனே! கைதவம் இயற்றி - வஞ்சனைகள் பல செய்து;
யாண்டும் கழிப்ப அரும் -
எவ்விடத்தும் தீர்த்துக் கொள்வதற்கு அரிய;
கணக்கு இல் தீமை -
எண்ணற்ற பாவச் செயல்களை; வைகலும்
புரிந்துளாரும் -
நாள்தோறும் செய்தவர்களும்; வள்ளல் எய்தவர் - வள்ளல்
தன்மையுடைய இராமனால் அம்பெய்து கொல்லப்பட்டவர்களா யின்; வான்
உயர் நிலைமை-
மிக உயர்ந்த நிலையான வீடுபேற்றை; பெறுவர் என்றால்-
அடைவார்கள் என்றால்; இணை அடி இறைஞ்சி - அவ்விராமனதுஇரண்டு
திருவடிகளை வணங்கி; ஏவல் செய்தவர் - அவனிட்ட பணிகளைச்
செய்தவர்கள்; பெறுவது - பெறும் பேற்றின் சிறப்பு; செப்பல் ஆம்
சீர்மைத்து ஆமோ -
சொல்லக்கூடிய தன்மையையுடையதாகுமோ?

     ஐய என்றது அன்பினால் வந்த மரபுவழு அமைதி யாண்டும் கழிப்பரும்
கணக்கில் தீமை - எவ்விடத்தும் எத்தகைய பிராயச்சித்தங்களாலும் தீர்த்துக்
கொள்ள முடியாத பாவச் செயல்.  பெரும்பாவங்களை நாள்தொறும்
செய்தவர்களும் இரமனால் கொல்லப்பட்டால் வீடுபேறு எய்துவர் என்பது
விராடன், கவந்தன், கரன் முதலிய அரக்கர் பல்லாயிரவர் எனத் தீயோர் பலர்
இராமன் செஞ்சரம் பட்டு உயர்கதி பெற்றமையால் அறியலாம். புரிந்துளாரும்-
இழிவு சிறப்பும்மை.  தன்னை யடைந்தாரின் தகுதி நோக்காது
அனைவர்க்கும் வீடுபேறு அளித்தளின் இராமனை 'வள்ளல்' எனக் குறித்தான்.
தீவினை புரிந்தவர்களும் வீடுபேறு பெறுவர் என்றால், நல்வினைப் பயனால்
அவன் இணையடி தொழுது ஏவல் புரிவார் பெறும் பேறு சொல்லுதற்கரிது
எனக்கூறி, அத்தகைய பேற்றினைச் சுக்கிரீவன் பெற்றுள்ளான் என வாலி
பாராட்டினான்.  'தீமை வைகலும் புரிந்துளார்' என்புழித் தன்னையும்
'இணையடி இறைஞ்சி ஏவல் செய்தவர்' என்புழித் தன் தம்பி சுக்கிரீவனையும்
உளப்படுத்திக் கூறிய நயம் காண்க.  சரபங்கர் இராமனைக் கண்டு மகிழ்ந்து
வீடுபேறு அடையும் நிலையில்,

    'அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
     உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறுபேறு
     எண்தவ நெடிது எனின், இறுதியில் அவனைக்
     கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ?        (2630)

எனப் போற்றுதல் காண்க.

     இப்பாடல் ஒன்று உரைக்கப் புகுந்து அதனால் மற்றொன்றை விளங்கக்
கூறல் என்னும் மரபு பற்றித் 'தொடர்நிலைச் செய்யுள் பொருட்பேறணி'
என்பதில் அடங்கும்.                                             141