4076. | 'அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்தகாலை? இருமையும் எய்தினாய்; மற்று இனிச் செயற்பாலது எண்ணின், திரு மறு மார்பன் ஏவல் சென்னியின் சேர்த்தி, சிந்தை ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே. |
விதியினாரே - ஊழ்வினையே; உதவுவான் அமைந்த காலை - துணையாவதற்குப் பொருந்தும் பொழுது; அருமை என் - அடைதற்கு அருமையானது யாது உளது? (எதுவுமில்லை); இருமையும் எய்தினாய் - இம்மை, மறுமை இன்பங்களை எல்லாம் நீ அடைந்தாய். இனிச் செயற்பாலது எண்ணின் - இனி நீ செய்யத்தக்கது யாதெனக் கருதுமிடத்து; திருமறு மார்பன் - திருமகளையும் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவினையும் மார்பில் கொண்ட திருமாலாகிய இராமனின்; ஏவல் சென்னியில் சேர்த்தி - கட்டளையைத் தலை மேற்கொண்டு; சிந்தை ஒருமையின் நிறுவி - மனத்தை (அவனுக்குக் குற்றவேல் புரிவதாகிய) ஒருமை நிலையில் நிறுத்தி; மும்மை உலகினும் உயர்தி - மூன்று உலகங்களிலும் சிறப்புற்று உயர்வாயாக. விதியே வந்து உதவுகையில் கிடைத்தற்கரியது ஒன்றுமில்லை என்பது உலகறிந்த உண்மை. 'விதியே நல்கின் மேவல் ஆகாது ஏன்?' (3808) எனச் சுக்கிரீவன் உரைத்தது காண்க. விதியினார் - உயர்வு கருதி உயர்திணைச் சொல்லால் கூறினான். திணை வழுவமைதி. விதியினாரே - ஏகாரம்தேற்றுப் பொருள். ஏவல் சென்னியில் சேர்த்தல் - கட்டளையைத் தலைமேற்கொண்டு பணிவுடன் செய்து முடித்தலைக் குறிக்கும் மற்று - வினைமாற்று. 142 |