4077.'மத இயல் குரக்குச் செய்கை
      மயர்வொடு மாற்றி, வள்ளல்
உதவியை உன்னி, ஆவி
      உற்றிடத்து உதவுகிற்றி;
பதவியை எவர்க்கும் நல்கும்
      பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து, நொய்தின்
      தீர்வு அரும் பிறவி தீர்தி.

     மத இயல் குரக்குச் செய்கை - அறியாமையால் செருக்குறும்
இயல்பாகிய குரங்கின் செயலையும்; மயர்வொடு - மயக்கத்தையும்; மாற்றி -
அறவே போக்கி; வள்ளல் உதவியை உன்னி - வள்ளலாகிய இராமன்
உனக்குச் செய்த உதவியை மறவாமல் உள்ளத்தில் கொண்டு; உற்றிடத்து -
அவனுக்கு ஓர் இடையூறு ஏற்பட்ட காலத்தில்; ஆவி உதவுகிற்றி - உனது
உயிரையும் கொடுத்து உதவிபுரிவாயாக.  பதவியை எவர்க்கும் நல்கும் -
உயர்பதவியாகிய வீடுபேற்றை எல்லோர்க்கும் வழங்கும்; பண்ணவன் -
கடவுளாகிய இராமன்; பணித்த யாவும் - கட்டளையிட்ட
செயல்களையெல்லாம்; சிதைவு இல செய்து - குறையில்லாதவனாய்ச் செய்து;
தீர்வு அரும் பிறவி -
எளிதில் நீக்குதற்கரிய பிறவியை; நொய்தில் தீர்தி -
எளிதில் நீங்கப் பெறுவாய்.

     'மத' என்பது மடமையினை உணர்த்தும் உரிச்சொல். அதன் காரியமாகிய
'செருக்கு' என்னும் பொருளில் இங்கு வந்தது.  குரக்குச் செய்கை -
அறிவுக்குறைவாலும், சபல புத்தியாலும், திரிபுணர்ச்சியாலும் செய்யும் குரங்கின்
செயல்கள்.  மயர்பு - இயற்கைப் பேதைமையாலும் மதுபானத்தாலும் மனம்
மயங்குதல்.  வள்ளல் உதவி - பகைவனைக் கொன்று, மனைவியை மீட்டு,
நாட்டாட்சியினையும் கொடுத்தமை.  உற்றிடத்து = உற்று + இடத்து தொகுத்தல்
விகாரம்.  உதவுகிற்றி - ஏவல் ஒருமை வினைமுற்று.  கில் என்பது
ஆற்றலுணர்த்தும் இடைநிலை.  செய்ந்நன்றி மறவாமை பற்றி வாலி கூறுதல்
நோக்கத்தக்கது.                                                143