சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலப்படுத்தல்

4079. என்ன, இத்தகைய ஆய
      உறுதிகள் யாவும், ஏங்கும்
பின்னவற்கு இயம்பி, நின்ற
      பேர் எழிலானை நோக்கி,
'மன்னவர்க்கு அரசன் மைந்த!
      மற்று இவன் சுற்றத்தோடும்
உன் அடைக்கலம்' என்று உய்த்தே,
      உயர்கரம் உச்சி வைத்தான்.

     என்ன இத்தகைய ஆய - என்று இத்தகைய தன்மையனவான;
உறுதிகள் யாவும் -
நன்மை பயக்கும் அறிவுரைகளையெல்லாம்; ஏங்கும்
பின்னவற்கு இயம்பி -
(தன் இறப்பினை எண்ணி) வருந்தும் தம்பி
சுக்கிரீவனுக்குச் சொல்லி; நின்றபேர் எழிலானை நோக்கி - தன்முன் நின்ற
பேரழகனான இரரமனை நோக்கி; 'மன்னவர்க்கு அரசன் மைந்த - வேந்தர்
வேந்தனாகிய தசரதன் புதல்வனே!இவன் சுற்றத்தோடும் -
''சுக்கிரீவனாகிய இவன் தன் சுற்றத்தாருடன்; உன் அடைக்கலம் - உனக்கு
அடைக்கலப் பொருளாவான்''; என்று உய்த்தே - என்று சொல்லி
(சுக்கிரீவனை இராமன் பால்) செலுத்தி; உயர் கரம் - உயர்த்திய கைகளை;
உச்சி வைத்தான் -
தலைமேல் வைத்து வணங்கினான்.

     ஏங்கும் பின்னவன் தமையன இறப்பிற்காகவும்; அந்த இறப்பிற்குத் தான்
காரணமானதையும் எண்ணி வருந்தும் சுக்கிரீவன். பேரெழிலான் - உறுப்பு
நலன்கள் அனைத்தையும் பெற்றவன்.  'இவன் வடிவு என்பது ஓர் அழியா
அழகுடையான்' (1926); 'அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும்' (2344),
என இராமன் பேரழகு குறிக்கப்படல் காண்க.

     உயர்கரம் உச்சி வைத்தான் என்பதற்கு இராமனுடைய கையைப் பற்றிச்
சுக்கிரீவன் தலை உச்சியில் கை வைத்தான் என்றும் 'வாலி சுக்கிரீவன்
தலையில் கை வைத்து அடைக்கலமாகக் கொடுத்தான் என்றும் பொருள்
கூறுவாருளர்.                                                 145