அங்கதன் வருகை

4080.வைத்தபின், உரிமைத் தம்பி மா
      முகம் நோக்கி, 'வல்லை
உய்த்தனை கொணர்தி, உன்தன் ஓங்கு
      அரு மகனை' என்ன,
அத் தலை அவனை ஏவி
      அழைத்தலின், அணைந்தான் என்ப,
கைத்தலத்து உவரி நீரைக்
      கலக்கினான் பயந்த காளை.

     வைத்த பின் - (சுக்கிரீவனைச் சுற்றத்தோடு அடைக்கலமாக ஏற்குமாறு)
கையினைத் தலைமேல் வைத்த பிறகு; தம்பி மாமுகம் நோக்கி - தம்பி
சுக்கிரீவனது துயரத்தால் பொலி விழந்த முகத்தைப் பார்த்து; உன்தன் ஓங்கு
அரு மகனை -
உன்னுடைய சிறந்த அரும்புதல்வனான அங்கதனை; வல்லை
உய்த்தனை கொணர்தி -
விரைவில் அழைததுக் கொண்டுவருவாய்; என்ன -
என்று கூறி; அத்தலை அவனை ஏவி அழைத்தலின் - (அங்கதன் இருந்த)
அவ்விடத்திற்குச் சுக்கிரீவனை அனுப்பி அழைத்தமையால்; கைத்தலத்து
உவரி நீரை -
தன் கைகளால் கடலை; கலக்கினான் பயந்த காளை -
கடைந்த வாலி பெற்ற மகனாகிய அங்கதன்; அணைந்தான் - அங்கு வந்து
சேர்ந்தான்.

     வாலியின் உடன்பிறப்பு ஆதலின் சுக்கிரீவன் 'உரிமைத் தம்பி' எனக்
குறிக்கப் பெற்றான்.  'உன்தன்மகன்' என்றது; தனக்கும் தம்பிக்கும் வேறுபாடு
நீங்கியமையானும், இனிச் சுக்கிரீவனை அங்கதனைத் தன் மகனாகக் காக்க
வேண்டிய கடமை பற்றியும் கூறியதாகும். உவரி நீர் என்பது உப்பு நீரையுடைய
கடலைக் குறிப்பதெனினும், இங்கு வாலி கலக்கியது என்றதால், அது
பாற்கடலைக் குறிக்கும்.  வாலி கடல் கடைந்ததைக் கவிச் சக்கரவர்த்தி (3955,
3957, 3960, 3961, 4085, 4106, 6997) பல பாடல்களில் கூறியுள்ளமை காண்க.
காளை - உவமை ஆகுபெயர் என்ப -அசை.                        146