அங்கதன் புலம்பல் 4081. | சுடருடை மதியம் என்னத் தோன்றினன்; தோன்றி, யாண்டும் இடருடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான், மடலுடை நறு மென் சேக்கை மலை அன்றி, உதிர வாரிக் கடலிடைக் கடந்த காதல் தாதையை, கண்ணின் கண்டான். |
யாண்டும் - எப்பொழுதும்; இடருடை உள்ளத்தோரை - துன்ப மடைந்த மனத்தாரை; எண்ணினும் உணர்ந்திலாதான் - மனத்தாலும் எண்ணி அறியப்பெறாதவனாகிய அங்கதன்; சுடருடை மதியம் என்ன - ஒளிபொருந்திய முழு நிலவு போல; தோன்றினன் - அங்கு வந்து சேர்ந்தனன்; தோன்றி - அங்ஙனம் வந்து; மடலுடை நறுமென் சேக்கை மலை அன்றி - பூவிதழ்களாகிய மணம் மிக்க மென்மையான படுக்கை யாகிய மலையின் மீதன்றி; உதிரவாரிக் கடலிடை - இரத்தப் பெருக்காகிய கடலிடை; கிடந்த காதல் தாதையை - கிடந்த தன் அன்பிற்குரிய தந்தையை; கண்ணின் கண்டான் - தன் கண்களால் கண்டான். அங்கதனின் வடிவ அழகிற்குக் கலைகள் நிறைந்த முழுமதி உவமை ஆயிற்று. சுடருடை மதி. ஒளிக் கற்றையாகிய கலைகள் நிறைந்த முழுமதி. வாலியின் ஆட்சியில் எவரும் எப்பொழுதும் துனப்ம் அடைந்தது இல்லையாதலின் அங்கதன் துன்புற்றார் நிலை இத்தகையது என மனத்தாலும் எண்ணி அறியும் வாய்ப்பினைப் பெறாதவனாதலின் 'எண்ணினும் உணர்ந்திலாதான்' என்றார். எண்ணினும் உணர்த்திலாதான் என்றதால் துன்புற்றாரை நேரில் கண்ட நிலையும், துன்புற்றார் அடையும் துன்பம் பற்றிக் கேட்டறியும் நிலையும் பெற்றிலன் என்பது பெறப்படுகிறது. அது வரை துன்பம் என்பதையே சிறிதும் உணராதபடி வளர்ந்து வந்த அங்கதன் சிறப்பு உணர்த்தப்பட்டது. எண்ணினும் இறந்தது தழீஇய எச்ச உம்மை. துன்பர் அறியாத அங்கதன் தந்தையை, நறுமென் மலர்களால் அமைக்கப் பெற்ற படுக்கை மலையிலன்றி, குருதிக் கடலில் காணவேண்டிய அவல நிலைக்கு உள்ளானான் என்ற இரக்கம் தோன்ற 'இடருடை உள்ளத்தாரை எண்ணினும் உணர்ந்திலாதான் மடலுடை நறுமென் சேக்கை மலையன்றி, உதிர வாரிக் கடலிடைக் கிடந்த காதல் தாதையைக் கண்ணின் கண்டான்' என்றார். நறுமலர்ப் படுக்கையாகிய மலை என்றதும், குருதிப் பெருக்காகிய கடல் என்றதும் உருவக அணியின் பாற்படும். இன்ப மலையில் காணாது தந்தையைத் துன்பக் கடலிடைக் கண்டான் என்று கூறிய நயம் காண்க. 147 |