4082. கண்ட கண்  கனலும் நீரும்
      குருதியும் கால, மாலை,
குண்டலம் அலம்புகின்ற குவவுத்
      தோள் குரிசில், திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்தது;
      அம் மதியின் மீதா
விண்தலம் தன்னின் நின்று ஓர்
      மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான்.

     குண்டலம் அலம்புகின்ற - குண்டலங்கள் அசைந்து ஒளிரப் பெற்ற;
மாலை குவவுத்தோள் -
மாலை அணிந்து திரண்டு உயர்ந்த தோள்களை
உடைய; குரிசில் - நம்பியாகிய அங்கதன்; கண்ட கண் - (குருதி
வெள்ளத்தில் தன் தந்தையைக்) கண்ட கண்கள்; கனலும் நீரும் - (வெகுளித்)
தீயையும், கண்ணீரையும்; குருதியும் கால - இரத்தத்தையும் சொரிய; திங்கள்
மண்டலம் -
சந்திர மண்டலம்; உலகில் வந்து கிடந்தது- வானத்திலிருந்து
மண்ணகத்தில் வந்து விழுந்து கிடந்ததாக; அம்மதியின் மீதா - (சந்திர
மண்டலத்தின் நடுவே சந்திரன் ஒளி வட்டத்துடன் காட்சி தருவதுபோல தன்
குண்டலங்களின் ஒளிவட்ட நடுவே கிடந்த) அந்தச் சந்திரன் போன்ற வாலி
மீது; விண்தலம் தன்னின் நின்று - வானத்திலிருந்து; ஓர் மீன்
விழுந்தென்ன -
ஒரு நட் சத்திரம் விழுந்தது போல; வீழ்ந்தான் - வாலியின்
உடல்மீது விழுந்தான்.

     தன் தந்தையைக் கொன்ற பகைவன் மீதெழுந்த சினத்தால் தீயையும்,
தந்தையைக் குருதிக் கடலில் கண்டதால் ஏற்பட்ட துன்பத்தால் கண்ணீரையும்,
தந்தைக்கே இந்நிலை ஏற்பட்டதா என்ற அதிர்ச்சியால் குருதியையும் கண்கள்
சிந்தின என்க.  காதில் அணிந்த குண்டலங்கள் தோள் அளவும்
தொங்குவதால் 'குண்டலம் அலம்புகின்ற குவவுத்தோள்' என்றார்.  சந்திரனைச்
சுற்றி வட்டமான ஒளி கொண்டது சந்திர மண்டலம்.  தான் அணிந்திருந்த
குண்டல ஒளியுடன் வாலி விழுந்த கிடந்த தோற்றம் சந்திர மண்டலத்திற்கும்
வாலிக்குச் சந்திரனும் உவமையாயின.  வாலி மீது அங்கதன் விழுந்தது
விண்மீன் ஒன்று சந்திரன் மீது வீழ்ந்ததை ஒத்தும் காணப்பட்டது. இல்பொருள்
உவமை அணி.  மீன் - மின் என்னும் வினையடியாகப் பிறந்த பெயர்.
குரிசில் - ஆண்பால் சிறப்புப் பெயர்; விழுந்தென்ன - விழுந்ததென்ன
என்பதன் தொகுத்தல் விகாரம்.                                    148