4083. 'எந்தையே! எந்தையே! இவ் எழு
      திரை வளாகத்து, யார்க்கும்,
சிந்தையால், செய்கையால், ஓர்
      தீவினை செய்திலாதாய்!
நொந்தனை! அதுதான் நிற்க, நின்
      முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர்
      அதன் வலியைத் தீர்ப்பார்?

     எந்தையே எந்தையே - (அங்கதன் தன் தந்தையை நோக்கி) என்
தந்தையே! என் தந்தையே! இவ்எழுதிரை வளாகத்து - மேன்மேலும்
எழுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில்; யார்க்கும்
சிந்தையால் செய்கையால் -
எவர்க்கும் மனத்தாலும் செயலாலும்; ஓர் -
தீவினை செய்திலாதாய் -
ஒரு தீய காரியத்தையும் செய்யாதவனே!
நொந்தனை -
(அங்ஙனமிருந்தும்) நீ இவ்வாறு துன்பம் அடைந்தாய்; அது
தான் நிற்க -
அஃது ஒரு புறம் இருக்க; நின் முகம் நோக்கி - உன்
முகத்தைப் பார்த்து; கூற்றம் வந்ததே அன்றோ - (அஞ்சாமல்) யமனும் (உன்
உயிர் கொள்ளுதல் பொருட்டு) வந்து விட்டான் அல்லவா?அஞ்சாது அதன்
வலியைத் தீர்ப்பார் ஆர் -
இனி அச்சம் கொள்ளாமல் கூற்றுவனின்
வலிமையை அழிக்க வல்லார் வேறு யாருளர்? (ஒருவரும் இலர்).

     எந்தையே என்னும்அடுக்கு அவலம் பற்றியது.  எழுதிரை வளாகம்
என்பதற்கு இந்த ஏழு கடல்கள் சூழ்ந்த நிலப்பரப்பில் எனவும் பொருள்
கொள்ளலாம்.  எழுதிரை - எழுகின்ற திரை எனின் வினைத்தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழியாய் கடலைக் குறிக்கும்.  எழுதிரை - ஏழு கடல்கள் எனப்
பண்புத்தொகையாயின் 'திரை' சினையாகுபெயராய்க் கடலைக் குறிக்கம்.  வாலி
தனக்குப் பகைவராயினாரை வருத்துவானேயன்றி, தானாகப் பிறர்க்குத் துன்பம்
செய்வதைச் சிந்திப்பதும் செய்வதும் இலன் என்பதால் 'சிந்தையும் செய்கையும்
கூறப்பட்டதால் இனம் பற்றி 'மொழியும்' கொள்ளப்படவேண்டும்.  வாலி,
சுக்கிரீவன் மீது பகைமை பாராட்டியதும், உருமையைக் கவர்ந்ததும் நீதியின்
பாற்பட்ட செயலாகவே வாலியின் பக்கத்தில் கருதப்பட்டதால், அங்கதனும்
அச்செயல்களைத் தவறு எனக் கருதிலன்.  அதனால் தன் தந்தை
முக்கரணங்களாலும் தீங்கு செய்யாதவன் என எண்ணினான்.  'கூற்றும் என்
பெயர் சொலக்குலையும்' (3962) என வாலி கூற னானாக யமனும் நேர்நின்று
உயிர்நீக்க வந்துவிட்டானே எனத் தந்தைக்கு நேரிட்ட எளிமை நிலை நோக்கி
இரங்கினான்.  இனி யமனை வெல்வார் எவருமிலர் என்றதால் வாலியின்
பெருவலி புலப்படுகிறது.                                        149