4085.'குல வரை, நேமிக் குன்றம்,
      என்ற வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும், நின் பொன் - தாளின்
      தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
மலை கொளும் அரவும், மற்றும்,
      மதியமும், பலவும் தாங்கி,
அலை கடல் கடைய வேண்டின்,
      ஆர் இனிக் கடைவர்? - ஐயா!

     ஐயா - ஐயனே!குலவரை - (எட்டுத்திசைகளிலும் உள்ள) எட்டுக் குல
மலைகள்; நேமிக் குன்றம் - சக்கரவாளகிரி; என்ற வானுயர்ந்த - என்று
பெயர் சொல்லப்பெற்று வானோங்கிய; கோட்டின் தலைகளும் - மலையின்
சிகரங்களும்; நின் பொன் தாளின் தழும்பு - நின் அழகிய பாதங்களை
வைத்தால் பதியும் அடிச்சுவடாகிய தழும்பினை; இனி, தவிர்ந்த அன்றே -
இனி நீங்கப் பெற்றன அல்லவா?மலை கொளும் அரவும் - மந்தர மலை
எனும் மத்தினைச் சுற்றி வளைத்துக் கொள்ளவல்ல வாசுகி என்னும்
பாம்பினையும்; மதியமும் - (அடை தூணாகிய) சந்திரனையும்; பலவும்
தாங்கி-
(அடைகல்லாகிய ஆமை முதலிய) பிறவற்றையும் பொறுத்து;
அலை கடல் கடைய வேண்டின்- (மீண்டும்) அலைகளை உடைய
பாற்கடலைக் கடைய வேண்டிவரின்; இனிஆர் கடைவர் - இனி யார்
வந்து கடைந்து அமுது அளிக்கவல்லவர்? (ஒருவரும் இலர்).

     அங்கதன் இப்பாடலில் தன் தாதையின் தாள் வலிமையினையும்
கைகளின் வலிமையினையும் கூறி வருந்தினான்.  ''எட்டு மாதிரத்திறுதி,
'நாளும் உற்று அட்டமூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்'' (3825) ஆதலின்
வாலி எண்திசைகளுக்குத் தாவிச் செல்கையில் அவன் கால்கள் பட்ட சுவடுகள்
எட்டுக் குல பர்வதங்களின் சிகரங்களிலும், சக்கரவாளகிரியின் சிகரத்திலும்
தழும்புகளாகப் பதிந்தன.  இப்போது வாலி இறந்தால் அத்தழும்புகள்
இலவாகும் என்பதாம்.  பாற்கடலைக் கடைவதற்கு வேணடிய மந்தர மலை,
வாசுகி முதலிய சாதனங்கள் இருந்தும் கடையும் ஆற்றல் பெற்ற வாலி
இல்லாமையால் பாற்கடலைக் கடைந்து அமுது பெறமுடியாது என்று
உரைத்தான்.  தேவர்களாலும் அசுரர்களாலும் கடைந்து எடுக்க முடியாத
அமுதத்தைத் தனி ஒருவனே கடைந்த கொடுத்த வாலியின் கைவன்மை
பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது.  ''சுழலும் வேலையைக் கடையும்
தோளினான்'' (3823) ''தேவர் உண்ண மந்தரப் பொருப்பால் வேலை
கலக்கினான்'' (6997) என முறையே அனுமனும் அங்கதனும் உரைப்பதும்
காண்க.  நேமிக்குன்றம் - சக்கரவாளகிரி.  இஃது இவ்வுலகத்தின்
எல்லைகளைச் சுற்றி வளைந்து அமைந்திருக்கும் மலைத் தொடர் என்ப.
வாலியின் கால்வன்மையும் கைவன்மையும் பாடலில் கூறிய நயம்காண்க. 151