4086. | 'பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது, யாதும் அஞ்சலித்து அறியாச் செங் கை ஆணையாய்! அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால்; இன் அமுது ஈந்த நீயோ, துஞ்சினை; வள்ளியோர்கள், நின்னின் யார் சொல்லற்பாலார்?' |
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் - பஞ்சைக் காட்டிலும் மென்மையான திருவடிகளை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்ட சிவபெருமானின்; பாதுகம் அல்லது - திருவடிகளை அல்லாது; யாதும் அஞ்சலித்து அறியா - வேறு எதையும் வணங்கி அறியாத; செங்கை ஆணையாய் - சிவந்த கைகளையும் ஆணைச்சக்கரத்தையும் உடையவனே! உன்னால் - (அமுதம் கொடுத்த) உன்னால்; அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் - தேவர்கள் எல்லோரும் (இறந்து போய் எண்ணிக்கையில் குறையாமல்) நிலைத்து வாழ்கிறார்கள்; இன் அமுது ஈந்த நீயோ - இனிய அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய நீயோ; துஞ்சினை - இறந்தவனானாய்; நின்னின் - உன்னை விட; வள்ளியோர் கள் - வள்ளல் தன்மை உடையவர்கள் என்று; சொல்லற் பாலார் யார் - சொல்லத்தக்கவர் வேறு யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்). தன் கைவன்மையால் பெற்று அமுதத்தைத் தான் உண்டு அழிவின்றி இராது, அதனைத் தேவர்களுக்கு அளித்து அவர்களை அமரர் ஆக்கிய வள்ளன்மையைக் கூறி அங்கதன் வருந்தினான். நெடிது நாள் வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஈந்த அதிகமான் செயலை ஈண்டு ஒப்பிட்டுக் காணலாம். வாலியின் பூத உடல் அழிந்தாலும் வள்ளன்மைச் செயலால் அவன் புகழ் நிலைத்திருக்கும் என்பதுபெறப்படுகிறது. 152 |