வாலியின் தேறுதல் மொழி 4087. | ஆயன பலவும் பன்னி, அழுங்கினன் புழுங்கி, நோக்கி, தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செங் கண் வாலி, 'நீ இனி அயர்வாய்அல்லை' என்று தன் நெஞ்சில் புல்லி, 'நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது' என்றான். |
ஆயன பலவும் பன்னி - அவ்வாறாகிய பலவற்றையும் மீண்டும் மீண்டும் கூறி; புழுங்கி அழுங்கினன் - புலம்பி வருந்தியவனாய்; நோக்கி - (தன் தந்தையைப்) பார்த்து; தீ உறு மெழுகின் - அனலில் பட்ட மெழுகினைப் போல; சிந்தை உருகினன் - நெஞ்சம் உருகி வருந்தினான். செங்கண் வாலி - (துன்பத்தால்) சிவந்த கண்களை உடைய வாலி; 'நீ இனி அயர்வாய் அல்லை - (தன் மகனை நோக்கி) இனி நீ வருந்துதல் வேண்டா'; என்று - என்று கூறி; தன் நெஞ்சில் புல்லி - அவனைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு; 'நாயகன் இராமன் - எல்லா உயிர்கட்கும் தலைவனான இராமன்; செய்த இது - செய்ததான இச்செயல்; நல்வினைப் பயன் என்றான்- யான் முன் செய்த புண்ணியத்தின் பயனாகும்' என்றான். பன்னுதல் - பலமுறை கூறுதல். சிந்தை உருகியமைக்கு நெருப்பில் பட்ட மெழுகு உவமையாம். நாயகன் இராமன் என்பதில் இராமனின் தலைமை உணர்த்தப்பட்டது. 'பூத நாயகன், நீர் சூழ்ந்த புலிக்கு நாயகன், அப்பூமேல் சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும் வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன்' (6994) என அங்கதன் இராவணனுக்கு இராமனின் நாயகச் சிறப்பைக் கூறுவது காண்க. இராமன் எனக்குச் செய்த இச்செயல் தான் செய்த நல்வினைப் பயன்' என வாலி அங்கதனுக்க அறிவுறுத்தி ஆறுதல் கூறினான். 153 |