வாலி அங்கதனை இராமனிடம் கையடைப்படுத்தல்

4091. என்றனன், இனைய ஆய
      உறுதிகள் யாவும் சொல்லி,
தன் துணைத் தடக் கை
      ஆரத் தனயனைத் தழுவி, சாலக்
குன்றினும் உயர்ந்த திண் தோள்
      குரக்குஇனத்து அரசன், கொற்றப்
பொன் திணி வயிரப் பைம்
     பூண் புரவலன்தன்னை நோக்கி.

     என்றனன் - என்று; இனைய ஆய உறுதிகள் - இத்தன்மையன வான
நன்மை பயக்கும் செய்திகள்; யாவும் சொல்லி - எல்லாம் (அங் கதனுக்குச்)
சொல்லி; குன்றினும் சால உயர்ந்த - மலைகளைவிட மிக உயர்ந்ததான;
திண்தோள் -
வலிய தோள்களை உடைய; குரக்கு இனத்து அரசன் -
வானரக் கூட்டத்திற்கு அரசனாகிய வாலி; தன் துணைத் தடக்கை -
தன்னுடைய இருபெரும் கரங்களால்; தனயனை ஆரத்தழுவி -
தன் மைந்தனான அங்கதனை இறுக அணைத்துக் கொண்டு;
கொற்றம் -
வெற்றியை உடைய; பொன்திணி வயிர பைம் பூண் -
பொன்னால் செய்யப்பட்டு வயிரம் முதலிய மணிகள் பதிக்கப் பெற்ற
பசும்(பொன்) அணிகலன்களை அணிந்த; புரவலன் தன்னை நோக்கி -
அரசனான இராமனைப் பார்த்து . . . .                           157