4092. | 'நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் துய் அடை கனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்; பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன் கையடை ஆகும்' என்று, அவ் இராமற்குக் காட்டும் காலை, |
பொய் அடை உள்ளத்தார்க்கு - பொய்ம்மை பொருந்திய மனத்தை உடையவர்க்கு; புலப்படாப் புலவ - அறியப்படாத தூய அறிவுடையவனே! நெய் அடை நெடுவேல் தானை - ''(இவன்) நெய் பூசப்பெற்ற நீண்ட வேலேந்திய சேனைகளை உடைய; நீல்நிற நிருதர் என்னும் - கருமைநிறம் பொருந்திய அரக்கர்கள் என்னும்; துய் அடை - பஞ்ச மூட்டைக்கு; கனலி அன்ன தோளினன் - நெருப்புப் போன்ற தோள்களை உடையவன்; தொழிலும் தூயன் - செயலாலும் தூய்மை உடையவன்; மற்று உன் கையடை ஆகும் - இனி, இவன் உன் அடைக் கலப் பொருளாவான்; என்று - என்று கூறி; அவ்இராமற்கு காட்டும் காலை - (அங்கதனை) அந்த இராமபிரானுக்குக் காட்டிய பொழுது . . . பொய் என்பது தன்னலம், தான் எனும் மாயையால் மனத்தில் தோன்றும் அஞ்ஞானம். அத்தகைய பொய்ம்மை நிறைந்த மனமுடையார்க்குப் புலப்படாது மறைந்தும், மெய்ம்மையுடையார் உள்ளத்தில் விழுமிய ஞானப் பொருளாய் வெளிப்பட்டும் அருள் புரிய வல்லன் இராமனே என்பதால் 'பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ' எனப் போற்றினான். 'பொய்யர்தம் பொய்யினை மெய்யர் மெய்யை' (திருவாசகம்.206) எனவும் ''மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்'' (திவ்யப்-886) எனவும் சான்றோர் பாடியமை காண்க. நெய் அடை நெடுவேல் - வேலுக்குத் துருப்பிடிக்காமல் இருக்க நெய் தடவுவர். நிருதர் சேனையைப் 'பஞ்சு' என உருவகம் செய்தமைக்கேற்ப அவர்களை அடியோடு அழிக்க வல்ல தோளினனாகிய அங்கதனைக் 'கனலியன்ன தோளினன்' என உவமைப்படுத்திக் கூறினான். நீல் - நீலம் என்பதன் குறை. நிருதர் - நிருதி என்பவளிடம் தோன்றியவர் - இது தத்திதாந்தம். கனலி - 'இ' சாரியை. மனத்தாலும் மொழியாலும் தூயனாதலோடு செயலாலும் தூயவன் என்பதைக் குறிக்கத் 'தொழிலும் தூயன்' என்றான். தொழிலும் - உம்மை எச்ச உம்மை. கையடை- கையில் ஒப்புவிப்பது; அதாவது அடைக்கலமாக்குவது. பகைவர்களை வெல்ல வல்ல அங்கதன் தோள் வலிமையினையும், குற்றமற்ற தூய்மை நிலையினையும் வாலி இராமனக்குஅறிவித்தான். 158 |