இராமன் அம்பு மீள்தல்

4094.கை அவண் நெகிழ்தலோடும், கடுங்
      கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி,
      மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து,
      தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து
      ஆவம் வந்து அடைந்தது அன்றே.

     அவண் கை நெகிழ்தலோடும் - அப்பொழுது, (தன் மார்பில்
ஊடுருவிய இராமன் அம்பைப் பிடித்திருந்த) கை தளர்ந்த அளவில்;
கடுங்கணை -
அந்தக் கொடிய அம்பு; கால வாலி வெய்ய மார்பு அகத்துள்
தங்காது -
யமன் போன்ற வாலியின் கொடிய மார்பினுள் தங்காமல்; உருவி -
துளைத்து ஊடுருவிக்கொண்டு; மேக்கு உயர மீப்போய் - மேல் நோக்கி
உயரத்தில் எழுந்து சென்று; துய்யநீர்க் கடலுள் தோய்ந்து - தூய்மையான
நீரை உடைய கடலுள் படிந்து நீராடி; தூய் மலர் அமரர் சூட்ட -
தூய்மையான மலர்களைத் தேவர்கள் சூட்டி வழிபட; ஐயன் - இராமபிரானின்;
வெந் விடாத -
முதுகை விட்டு நீங்காதுள்ள; கொற்றத்து ஆவம் - வெற்றி
பொருந்திய அம்பறாத்தூணியில்; வந்து அடைந்தது - வந்து சேர்ந்தது.

     காலன் வாலி - வாலிக்கு யமன் உவமை.  கூற்றுவனைப் போல
எதிர்ப்பட்டார் உயிரைக் கவரும் பேராற்றல் படைத்தவன்.  வெய்ய மார்பு -
எத்தகைய படைக்கலங்களையும் தடுத்து நிறுத்த வல்ல வலிய மார்பு; வீரர்
விரும்பும் மார்பு எனலுமாம்.  துய்ய என்பது தூய என்பதன் திரிபு.  துய்ய நீர்
- நீராடியவர்களின் தீவினை தீர்த்துத் தூய்மையாக்கும் புண்ணிய நீர்.
வெற்றிதரும் அம்புகளை உடைய புட்டில் ஆதலால் 'கொற்றத்து ஆவம்'
எனப்பட்டது.

     இராமன் அம்பு தன் செயலைச் செய்த பின், அவனது அம்பறாத்
தூணியை அடைவது இயல்பு.  அதனால் இங்கும் அந்த அம்பு வாலி
மார்பகத்துள் தங்காது, உருவி, உயரச்சென்று, தூய கடலில் தோய்ந்து ஆவம்
வந்து அடைந்தது.  'கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று,
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று
அன்றே' (388) எனத் தாடகை வதைப் படலத்தில் கூறிய கம்பர்
இராவணன்  வதைப்படலத்தில் 'மார்பில் புக்கு ஓடி உயிர் பருகி, புறம்
போயிற்று இராகவன்தன் புனித வாளி' (9899) என உரைப்பார்.
இராவணன் மார்பில் பட்ட அம்பு பாற்கடலில் தூய் நீராடி, மீண்டும் அம்பறாத்
தூணியை அடைந்தது (9900) என அதற்கு அடுத்த பாடலில் கூறுதல் ஈண்டு
ஒப்பு நோக்கத்தக்கது.  அன்று, ஏ - அசைகள்                       160