4096.குங்குமம் கொட்டி என்ன, குவி
      முலைக் குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெங் குருதி போர்ப்ப,
      புரி குழல் சிவப்ப, பொன் - தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில்
      புரண்டனள் - அகன்ற செக்கர்,
வெங்கதிர் விசும்பில் தோன்றும் மின்
      எனத் திகழும் மெய்யாள்.

     குவிமுலைக் குவட்டுக்கு ஒத்த - குவிந்த கொங்கை என்னும் மலைச்
சிகரத்திற்குப் பொருந்த; குங்குமம் கொட்டி அன்ன - குங்குமக் குழம்பினைக்
கொட்டியது போன்று; பொங்கு வெங்குருதி - (வாலியின் மார்பினின்று)
பொங்கிப் பெருகிய வெம்மை மிக்க இரத்தப்பெருக்கு; போர்ப்ப -
(அம்முலைக் குவடுகளில்) முழுவதும் பரவி மூடவும்; புரிகுழல் சிவப்ப -
நெறிப்புடைய கூந்தல் சிவக்கவும்; பொன் தோள் அங்கு அவன் - அழகிய
தோள்களையுடையவனாய் அவ்விடத்துக் கிடக்கின்ற வாலியின்; அலங்கல்
மார்பில் -
மாலை அணிந்த மார்பில்; அகன்ற செக்கர் - பரந்த
செவ்வானமாகிய; வெங்கதிர் விசும்பில் - வெப்பமான சூரிய
கிரணங்களையுடைய அந்தி வானத்தில்; தோன்றும் மின் என - தோன்றும்
மின்னலைப் போல்; திகழும் மெய்யாள் - விளங்கும் மேனியை
உடையவளாய்; புரண்டனள் - புரண்டு அழுதாள்.

     தாரை வாலியின் மார்பில் வீழ்ந்து புரளும்போது, வாலியின் மார்பினின்று
பெருகிய குருதி, தாரையின் மார்பு முழுவதும் படிந்த நிலை, இயற்கை அழகு
நிறைந்த அக்கொங்கைக் குவடுகளுக்குப் பொருந்துமாறு செயற்கையழகாகக்
குங்குமக் குழம்பினைக் கொட்டியது போன்றிருந்தது என்பதாம்.  இது
தற்குறிப்பேற்ற உவமை அணி.  அவள் தலைவிரிகோலமாய் அவன்மீது
புரண்டு அழுததால் அவளது கருங்குழலும் குருதி படிந்து சிவந்ததால்
'புரிகுழல் சிவப்ப' என்றார்.  வாலியின் குருதி பொங்கும் மார்பிற்குச்
செவ்வானமும், அவன் மார்பில் வீழ்ந்து புரளும் தாரைக்குச் செவ்வானத்தில்
தோன்றிய மின்னலும் உவமை.  துவளும் தன்மையாலும் ஒளியின் சிறப்பாலும்
மின்னல் தாரைக்கு உவமை ஆயிற்று.  வான்மீகத்திலும் இந்த உவமையே
காணப்படுகிறது.

     குங்குமம் - குங்குமக் குழம்பு முதலியனவற்றாலான மெய்ப்பூச்சு.
அலங்கல் - அழகிற்கென அணிந்த மாலைகளும், போர்ப்பூ மாலையும்.   162