4097. | வேய்ங் குழல், விளரி நல் யாழ், வீணை, என்று இனைய நாண, ஏங்கினள்; இரங்கி விம்மி உருகினள்; இரு கை கூப்பித் தாங்கினள் தலையில்; சோர்ந்து, சரிந்து தாழ் குழல்கள் தள்ளி, ஓங்கிய குரலால் பன்னி, இனையன உரைக்கலுற்றாள்: |
வேய்ங்குழல் - புல்லாங்குழலின் ஒலியும்; விளரி நல் யாழ் - விளரி என்னும் இரங்கற் பண்ணில் சிறந்த யாழிசையும்; வீணை - வீணையின் ஒலியும்; என்று இனைய நாண - என்று இத்தன்மையனவான இன்னிசைகளெல்லாம் (தாரையின் குரலினிமைக்கு ஒப்பாகாமல்) வெட்கம் அடையுமாறு; ஏங்கினள் - வருந்தி; இரங்கி விம்மி உருகினள் - புலம்பிப் பெருமூச்சுவிட்டு மனம் உருகி; இரு கை கூப்பித் தலையில் தாங்கினள் - இரண்டு கைகளையும் தலைமீது குவித்து; சோர்ந்து - தளர்வுற்று; சரிந்து தாழ் குழல்கள் தள்ளி - சரிந்து வீழ்கின்ற கூந்தலைத் தள்ளிவிட்டுக் கொண்டு; ஓங்கிய குரலால் - உரத்த குரலினால்; பன்னி - பலவாறு திரும்பத் திரும்பச் சொல்லி; இனையன உரைக்கலுற்றான் - இவ்விதமாகப் புலம்பிக் கூறலானாள். குழல் - துளைக்கருவி; யாழ், வீணை - நரம்புக் கருவிகள். யாழ்வேறு வீணை வேறு என்பர். காலப்போக்கின் மாறுதலால் இரண்டும் ஒன்றெனக் கருதப்பட்ட நிலையும் உண்டு. விளரி - இரங்கற் பண். குழல், யாழ், வீணையென இனையன நாண என்றதால் தாரையின் குரலில் இனிமை உணர்த்தப்பட்டது. மகளிர்க்குத் தம் கணவன்மார் இறந்த நிலையில் தோன்றும் மெய்ப்பாடுகள் இங்கு நன்கு கூறப் பெற்றமை காண்க. மகளிர் அழுகை ஒலியை ''குழல் இனைவது போல அழுதனள்'' (புறம் 143 - 15), 'ஆம்பலங்குழலின் ஏங்கிக் கலஙகு அஞர் உறுவோள்' (நற்றிணை 113 - 12); 'குழலினும் இனைகுவள் பெரிதே' (ஐங்குறு நூறு - 306) குழலேங்குமாறு ஏங்கி அழுதார் கோதை மடவாரே' (சீவக - 2945) என இசைக் கருவியோடு இயைபுபடுத்திக் கூறும் இடங்கள் ஒப்புநோக்கத்தக்கன. ஏங்கினள்: முற்றெச்சம். 163 |