4101. | 'அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய், உள் அன்பினால் இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும் வணங்காது, இத் துணை வைக வல்லையோ? |
ஆசை தோறும் உற்று - திசைகள் தோறும் சென்று; உள் அன்பினால் இணங்கா - உள்ளத்துப் பக்தியோடும் கூடி; உணங்கா நான் மலர் தூய் - வாடாத புதிய மலர்களைத் தூவி; காலம் இரண்டொடு ஒன்றினும் - காலை, மாலை நண்பகல் ஆகிய மூன்று காலங்களிலும்; அணங்கு ஆர் பாகனை - மாதொரு பாகனாகிய சிவபெருமானை; வணங்காது - வழிபடாமல்; இத்துணை - இவ்வளவு நேரம்; வைக வல்லையோ - தங்கியிருக்க வல்லாயோ? வாலி நாள்தொறும் எல்லாத் திசைகளுக்கும் சென்று சிவபிரானை வழிபட்டு வரும் வழக்கமுடையவன் என்பதை 3822, 3825, எண்ணிட்ட பாடல்களிலும் காண்க. 'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி, வாலியார் வழிபடப் பொருந்தினார்'; நீல மா மணிநிறத் தரக்கனை இருபது கரத்தோடு ஒல்க. வாலினால் கட்டிய வாலி வழிபட வணங்கும் கோயில். என்னும் திருஞானசம்பந்தர் தேவாரமும் (வடகுரங்காடுதுறை : 6,8) ஈண்டுக் காணத்தக்கது. நாள்மலர் - அன்றலர்ந்த மலர்; வாலியின் சிவபூசையைத் தாரை நேரில் அறிந்தவளாதலின் 'வணங்காது இத்துணை வைக வல்லையோ' எனப்புலம்பினாள். 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்று நம்பியாரூரரும் மூன்று காலங்களைக் குறித்துள்ளமை காண்க. திருத்தொண்டத் தொகை. (10.7) 167 |