4106.'ஓயா வாளி ஒளித்து நின்று எய்துவான்
ஏயா வந்த இராமன் என்று உளான்,
வாயால் ஏயினன்என்னின், வாழ்வு எலாம்
ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்!

     அமிழ்தேயும் ஈகுவாய் - (சாவா மருந்தாகிய) அமுதத்தை வேண்டினும்
கொடுப்பவனே!ஓயா வாளி - பகைவன் உயிரைக் கவர்ந்தாலன்றி நீங்கா
அம்பை; ஒளித்து நின்று - மறைந்து நின்று; எய்வான் - (உன்மேல்)
செலுத்துவதற்காக; ஏயா வந்த - உடன்பட்டு வந்த; இராமன் என்று உளான்
-
இராமன் என்னும் பெயரில் உள்ளவன்; வாயால் ஏயினன் என்னின் -
(உன்னிடம்) தன் வாய்மொழியால் இன்னது வேண்டும் என்று
கேட்டிருப்பபனாயின்; வாழ்வு எலாம் ஈயாயோ - உனக்குரிய அரசாட்சி
முதலிய வாழ்க்கைச் செல்வங்கள் அனைத்தையும் (சுக்கிரீவனுக்குக்)
கொடுக்கமாட்டாயோ?

     இராமன் என்று உளான்' என இங்குக் குறித்தது சிறப்பில்லாத
ஒருவனைக் குறிப்பதாக உள்ளதெனலாம்.  முன்னரும் 'இராமன் என்பவன்'
எனத் தாரை (3964) குறித்தமை காண்க.  'ஓயா வாளி ஒளித்து நின்று ஏயா
வந்த' என்றது இராமனது தகுதியற்ற செயலைச் சுட்டியதாகும்.  வாலியின்
வண்மைக் குணத்தை அறிந்து எளிதில் வாய்ச் சொல்லால் பெறக்கூடிய
செல்வத்தை, மாசுண்டாகுமாறு மறைந்திருந்து அம்பு எய்து வாலியைக் கொன்று
பெற வேண்டுமா? எனத் தாரை புலம்பினாள்.  தேவர் வாழ அமுதம்
அளித்தவன், தன் உயிரையும் வேண்டியிருப்பின் கொடுத்திருப்பன் என்பது
கருத்தாகும்.  'ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்றும் ஒருங்கீயும்மே'
(புறம். 109 : 17 - 18), 'பாரியும் பரிசிலர் இரப்பின், வாரேன் என்னான் அவன்
வரையன்னே' (புறம் - 108.5-6) என்ற அடிகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.
அமிழ்தேயும் - உம்மை உயர்வு சிறப்பும்மை; ஈகுவாய் 'கு' சாரியை.
பரிசிலாகப் பெறக்கூடிய பறம்புச் செல்வத்தை வன்பமுறை முற்றுகையால்
அடைய நினைந்த மூவேந்தர் செயலை எள்ளிய கபிலர் போல, தாரை
பேசினள்என்க.                                            172