மாருதி வாலியின் இறுதிக் கடன் செய்வித்தல்

4111. என்றாள், இன்னன பன்னி, இன்னலோடு
ஒன்று ஆனாள்; உணர்வு ஏதும் உற்றிலாள்;
நின்றாள்; அந் நிலை நோக்கி, நீதி சால்,
வன் தாள் மால் வரை அன்ன, மாருதி.

     என்றாள் - என்று புலம்பினளாய தாரை; இன்னன பன்னி -
இத்தன்மையனவான சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லி; இன்ன லோடு
ஒன்று ஆனாள் -
துன்பத்தோடு ஒன்று பட்டவளாய்; உணர்வு ஏதும்
உற்றிலாள் -
தன் உணர்வு சிறிதும் அடையாதவளாய்; நின்றாள் -
செயலொழிந்து நின்றாள்; அந்நிலை நோக்கி - (தாரையின்) அந்த
நிலைமையைக் கண்டு; நீதி சால் - நீதி நிறைந்தவனும்; வன்தாள் - வலிய
முயற்சியுடையவனுமான; மால்வரை அன்ன மாருதி - பெரிய மலையினை
ஒத்த தோற்றமுடைய அனுமன். . . .

     இப்பாடல் அடுத்த இரு பாடல்களோடு குளகமாய் இயைந்து வினை
முடிபு கொள்ளம்.  அனுமன் நீதி நெறியும் வலிய முயற்சியும் உடையவன்
என்பதைச் சுக்கிரீவனை இராமனிடம் நட்புக் கொள்ளச் செய்த
நிலையிலிருந்தே அறியலாம்.  மாருதிக்கு மால் வரை உவமை.  ''பொன் உருக்
கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத் தன் உருக்கொண்டு நின்றான்''
(3781) என்ற உவமை காண்க.  'மேரு மலை போன்ற பொன்மேனியுள்ளவன்'
என அனுமன் கூறப்படுவதால் வரை இங்கே மேரு மலை எனலாம்.
அழித்தற்கு அருமை, அளக்க முடியாத நிலை, தோற்றம், வலிமை, பெருமை
ஆகியவற்றால் அனுமனுக்கு மலை உவமைஆயிற்று.               177