4112. | மடவாரால், அம் மடந்தை முன்னர் வாழ் இடம் மேவும்படி ஏவி, வாலிபால் கடன் யாவும் கடைகண்டு, கண்ணனோடு உடன் ஆய், உற்றது எலாம் உணர்த்தலும், |
மடவாரால் - வானர மகளிரைக் கொண்டு; அம்மடந்தை - அந்தத் தாரையை; முன்னர் வாழ் இடம் - முன்பு (அவள்) வாழ்ந்திருந்த அந்தப்புரத்திற்கு; மேவும்படி ஏவி - செல்லும்படி அனுப்பிவிட்டு; வாலிபால்- வாலியின் பொருட்டு; கடன் யாவும் கடை கண்டு - செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை எல்லாம் (அங்கதனைக்கொண்டு) செய்து முடிதது; கண்ணனோடு - இராமனோடு; உடன் ஆய் - சென்று சேர்ந்து; உற்றது எலாம் உணர்த்தலும் - நடந்த செய்திகளை எல்லாம் சொன்ன அளவில் . . . புலம்புகின்ற தாரையை அவள் தோழியரான வானர மகளிரைக் கொண்டு அந்தப்புரத்திற்குச் செலச் செய்து அங்கதனைக் கொண்டு ஈமக் கடன்களை நிறைவேற்றியபின் நிகழ்ந்த செய்திகளை அனுமன் இராமனிடம் உரைத்தான் என்பதாம். இங்குக் கரியோன் என்னும் பொருளினதாகிய கண்ணன் என்ற பெயர் கண்ணன் அவதாரத்தைக் குறிக்காமல் திருமாலின் அமிசமாகிய இராமனைக் குறித்தது. இராமனைக் கண்ணன் எனக் குறித்தமை 'யாவர்க்கும் கண்ணன்' என்றே ஓதிய பெயர்' (1068), 'கண்ணன் தன் நிறம் தன் உள்ளக் கருத்தினை நிறைத்து' (1120), சுவண வண்ணனோடு கண்ணன்' (2553), 'கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை' (6411), என்னும் இடங்களிலும் காண்க. வாலியின் ஈமக்கடன் நிகழ்வை மிகச்சுருக்கமாகக் கம்பர் கூறியிருக்க, வான்மீகத்தில் மிக விரிவாக அமைத்திருப்பதைக்காணலாம். 178 |