கதிரவன் மறைவும், இராமன் இராப்பொழுதைக் கழித்த வகையும் 4113. | அகம் வேர் அற்று உக வீசு அருக்கனார், புகழ் மேலைக் கிரி புக்க போதினின், நகமே ஒத்த குரக்கு நாயகன் முகமே ஒத்தது, மூரி மண்டிலம். |
அகம் வேர் அற்று உக - இருளானது வேரோடு அழிந்து போகுமாறு; வீசு அருக்கனார் - ஒளி வீசுகின்ற சூரியன்; புகழ் மேலைக்கிரி - புகழ் மிக்க மேற்குத் திசையிலுள்ள அத்தமன கிரியை; புக்க போதினில் - அடைந்த பொழுதில்; மூரி மண்டலம் - சூரிய மண்டலம்; நகமே ஒத்த - மலை போன்ற; குரக்கு நாயகன் - குரங்கின அரசனான வாலியின்; முகமே ஒத்தது - முகத்தையே ஒத்து விளங்கியது. வானுற ஓங்கிய மலையே வாலிக்கு உவமையாகும். வாலியின் முகம் இயல்பில் செந்நிறமுடையதாதலும் அதற்கு மாலைக் காலக் கதிரவன் உவமையாவது இயல்பாகவே பொருந்தக் கூடியது. ஈண்டு - மாலைக் காலச் சூரிய மண்டலத்திற்கு வாலியின் குருதிபட்ட செந்நிற முகம் நிறத்தாலும், மறையும் செயலாலும் உவமையாகிறது. காலையில் உதித்துப் பகல் முழுதும் ஒளி பரப்பி மாலையில் மலையிடத்து மறையும் கதிரவனது செந்நிற ஒளி மண்டிலத்திற்கு, உலகில் தோன்றி, வாழ்நாள் முழுவதும் தன் புகழ் ஒளி பரப்பி, இராமன் அம்பால் உயிர் துறந்து கிடந்த வாலியின் செந்நிற முக ஒளியை உவமை கூறிய நயம் காணத்தக்கது. 'நீ உயிர் நீங்கியிருக்கையிலும் உன் முகம் மகிழ்ச்சி பெற்றது போல, அத்த கிரியை அடைந்த சூரியன் போன்ற நிறமுடையதாய்ப் பிழைத்திருக்கும்போது இருந்தது போலவே காணப்படுகிறது' என்று தாரை புலம்பியதாக வான்மீகத்தில் காணப்படும் செய்திஒப்பு நோக்கி உணர்தற்குரியது. 179 |