4114. மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன்
உறைந்தான், மங்கை திறத்தை உன்னுவான்;
குறைந்தான்,  நெஞ்சு குழைந்து அழுங்குவான்;
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான்.

     அருக்கன் - சூரியன்; மாலை மறைந்தான் - மாலைப் பொழுதில்
மறைந்தான். வள்ளியோன் - வண்மைக் குணமுடைய இராமன்; மங்கை
திறத்தை உன்னுவான் -
சீதையின் நிலையைக் கருதுபவனாய்; உறைந்
தான்-
(அங்கு ஓர் இடத்தில்) தங்கி; குறைந்தான் - மெலிந்து; நெஞ்சு
குழைந்துஅழுங்குவான் -
மனம் நொந்து வருந்துவானாகி; நிறைந்து ஆர்
கங்குலின்வேலை -
நிறைந்து பரவிய இரவுப் பொழுதாகிய கடலை;
நீந்தினான் - அரிதில் கடந்தான்.

     மனைவியைப் பிரிந்து வருந்துவார்க்கு இராப்பொழுது நீண்டதாகத்
தோன்றுவதாலும் அதனைக் கழித்தல் கடினமாக இருப்பதாலும் 'நிறைந்தார்
கங்குலின் வேலை நீந்திதான்'' என்றார்.  'இரவரம்பாக நீந்தினமாயின்.... கங்குல்
வெள்ளம் கடலினும் பெரிதே'' (குறுந்தொகை - 387), 'இந்நாள் நெடிய கழியும்
இரா' (குறள். 1168) என்பன ஒப்பு நோக்கத்தக்கன.  கங்குலின் - இன் சாரியை.
உன்னுவான்.  குறைந்தான், அழுங்குவான் என்னும் வினை முற்றுக்கள் எச்சப்
பொருளில் வந்து முற்றெச்சங்கள்.                                  180