4117. | அப்போதே, அருள் நின்ற அண்ணலும், மெய்ப் போர் மாருதிதன்னை, 'வீர! நீ, இப்போதே கொணர், இன்ன செய் வினைக்கு ஒப்பு ஆம் யாவையும், என்று உணர்த்தலும், |
அருள் நின்ற அண்ணலும் - இராமன் கட்டளைப்படி நடக்கும் பெருமையில் சிறந்த இலக்குவனும்; அப்போதே - அப்பொழுதே; மெய்ப்போர் மாருதி தன்னை - அறநெறி தவறாமல் போரைச் செய்ய வல்ல அனுமனைப் பார்த்து; 'வீர நீ - வீரனே! நீ; இன்ன செய் வினைக்கு - இந்த (முடிசூட்டு விழாச்) செயலுக்கு; ஒப்பு ஆம் யாவையும் - வேண்டிய எல்லாப் பொருள்களையும்; இப்போதே கொணர் - இப்பொழுதே கொண்டு வந்து சேர்ப்பாய்'; என்று உணர்த்தலும் - என்று கூறியவுடன் . . . . அருள் நின்ற -இராமனது அருள்மொழியாகிய ஆணை வழி நின்ற என்க. இதுவும் அடுத்த செய்யுளும குளகம்; 4119 ஆம் செய்யுளில் உள்ள 'சூட்டினான்' என்ற வினை கொண்டு முடியும் 3 |