4118. மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்,
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்,
நண்ணும் வேலையில், நம்பி தம்பியும்,
திண்ணம் செய்வன செய்து, செம்மலை,

     மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் - (சுக்கிரீவனை) நீராட்டுவதற்கு
வேண்டிய புண்ணிய தீர்த்தம் முதலான மங்கலப் பொருள்களும்; எண்ணும்
பொன்முடி ஆதி யாவையும் -
எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்
பொன்னால் செய்த மணிமுடி முதலிய எல்லாப் பொருள்களும்; நண்ணும்
வேலையில் -
வந்த சேர்ந்த அளவில்; நம்பி தம்பியும் - சிறந்தவனான
இராமனின் தம்பி இலக்குவனும்; செம்மலை - பெருமையுடைய சுக்கிரீவனுக்கு;
திண்ணம் செய்வன செய்து -
(முடிசூட்டும் முன்) தவறாது செய்யவேண்டிய
செயல்களைச் செய்து....

     மண்ணும் நீர் முதல் மங்கலம் - மங்கல நீராடலுக்கு வேண்டிய நீர்
முதலியன.  செம்மலை - உருபு மயக்கம்.                            4