4119. | மறையோர் ஆசி வழங்க, வானுளோர் நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு இறையோன்தன் இளையோன், அவ் ஏந்தலை, துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான். |
மறையோர் ஆசி வழங்க - வேதம் அறிந்த அந்தணர்கள் வாழ்த்துக் கூற; வானுளோர் - தேவலோகத்திலுள்ள தேவர்கள்; நறைதோய் நாள்மலர் தூவ - தேன் நிறைந்த அன்றலர்ந்த மலர்களைத் தூவ; நல் நெறிக்கு இறையோன் தன் - சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனுடைய; இளையோன் - தம்பியான இலக்குவன்; அவ் ஏந்தலை - பெருமைக்குரிய அந்தச் சுக்கிரீவனுக்கு; துறையோர் நூல்முறை - நெறிமுறைகளில் வல்லவர்கள் கூறிய நூல்களில் கூறிய முறைப்படி; மௌலி சூட்டினான் - முடி சூட்டினான். இராமன், நல்நெறிக்கு இறையோன் என்பதை நூல் முழுவதிலும் காணலாம். 'தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான்' (1769), 'நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்' (2429), 'புவிக்கு எலாம் வேதமே அன இராமன்' (1453), 'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்? உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?' (3689), 'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் கண்டு கொண்டேன்' (4066), 'அறநெறி நிறுத்த வந்தது' (4073) அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி' (7421) என்பன காண்க. வான்மீகத்தில் இந்த முடிசூட்டு விழா மிக விரிவாகக்கூறப்பட்டுள்ளது. 5 |