ஆசிரிய விருத்தம்

4121. 'ஈண்டுநின்று ஏகி, நீ நின்
      இயல்பு அமை இருக்கை எய்தி,
வேண்டுவ மரபின் எண்ணி, விதி
     முறை இயற்றி, வீர!
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற
      யாவையும் புரிந்து, போரில்
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி,
      நல் திருவின் வைகி.

     'வீர - வீரனே!நீ ஈண்டு நின்று ஏகி - நீ இவ்விடத்திலிருந்து சென்று;
நின் இயல்பு அமை இருக்கை எய்தி -
உனக்கு இயல்பாக (உரியதாகப்)
பொருந்தி இருப்பிடத்தை அடைந்து; வேண்டுவ மரபின் எண்ணி - புரிய
வேண்டிய செயல்களை முறைப்பட ஆராய்ந்து; விதிமுறை இயற்றி -
நூல்களில் விதிப்பட்ட நெறிப்படி செய்து; பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற - (நீ)
ஏற்றுக் கொண்ட பெரிய அரசாட்சிக்குத் தக்க; யாவையும் புரிந்து - எல்லாச்
செயல்களையும் செய்து; போரில் மாண்டவன் மைந்தனோடும் -
போர்க்களத்தில் இறந்துபட்ட வாலியின் மகன் அங்கதனோடும்; நல் திருவின்
வைகி -
சிறந்த செல்வ வாழ்க்கையில் நிலைபெற்று; வாழ்தி - வாழ்வாயாக.

     நல்லமைச்சர்களோடு நன்கு ஆய்ந்து செயல்களை முறைப்படவும்
திறம்படிவும் செய்ய வேண்டியிருப்பதால் 'வேண்டுவ மரபின் எண்ணி'
விதிமுறை இயற்றி' என்றான். 'மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி' என்றதால்
அரசியலில் அங்கதனுக்குச் சுக்கிரீவன் இளவரசுப் பட்டம் கட்டவேண்டும்
என்பதை இராமன் குறிப்பாக உணர்த்தினான் எனலாம்.                  7