4125. 'செய்வன செய்தல், யாண்டும்
      தீயன சிந்தியாமை,
வைவன வந்தபோதும் வசை
      இல இனிய கூறல்,
மெய்யன வழங்கல், யாவும்
      மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடு
      உயர்வன:  உவந்து செய்வாய்.

     யாண்டும் - (மேற் கூறிய நண்பர் பகைவர் நொதுமலர் என்னும்
மூவகையோருள்) எவரிடத்தும்; செய்வன செய்தல் - செய்யத்தக்க
காரியங்களைச் செய்தல்; தீயன சிந்தியாமை - தீமை பயக்கும் செயல்களைச்
செய்யக் கருதாமை; வைவன வந்த போதும் - பிறர் இகழ்ந்து பேசும் தீய
சொற்கள் செவியினை அடைந்த போதும்; வசை இல இனிய கூறல் -
(அவர்களிடத்தும்) பழிச்சொற்களை நீக்கி இனிய சொற்களைப் பேசுதல்;
மெய்யன வழங்கல் -
மெய்ம்மையோடு பொருந்திய சொற்களையே பேசுதல்;
யாவும் மேவின வெஃகல் இன்மை -
பிறரிடத்துப் பொருந்திய பொருள்களை
விரும்பாமை, (ஆகிய இத்தகைய செயல்கள்); உய்வன ஆக்கி - தம்மைக்
கடைப்பிடிப்பாரை நற்கதி அடையச் செய்து; தம்மோடு உயர்வன -
அவ்வுயிர்களோடு தாமும் மேம்பட்டு விளங்குவனவாகும். உவந்து செய்வாய்
-
(ஆகவே) இவற்றை நீ உவந்து செய்வாய்.

     முன் பாடலில் செல்வத்தைப் போற்றிக் காக்க வேண்டும்
எனக்கூறப்பட்டது.  இப்பாடலில் அச்செல்வம் அழியாமல் காக்கக்
கடைப்பிடிக்க வேண்டியன கூறப்படுகிறது.  செய்வன செய்தல் -
செய்யவேண்டிய நன்மைகளைச் செய்தல் வேண்டும் என்பதைச் 'செயற்பால
செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலதன்றிக் கெடும்' எனக் குறள் (437)
கூறுதல் காண்க.  தீயன சிந்தியாமை என்றதால் தீயன பேசுதலும், தீயன
செய்தலும் தவிர்க்கப்படுகின்றன.  வைவன வந்த போதும் வசை இல இனிய
கூறல்: ''வைததனை இன் சொல்லாக் கொள்வானும்'' (திரிகடுகம். 48), வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் வியத்தக்கான் வாழும் எனின்
(நாலடி. 325), ''இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன் சொலால் தான்
கண்டனைத்து இவ்வுலகு'' (குறள் 387) என்பன காண்க. வெஃகல் இன்மை -
''வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்'' (குறள் - 178), 'முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமை செல்வம் உடைக்கும் படை'' (திரிகடு 38)
என்பவையும் காணக.  இப்பாடலில் அரசன் கைக்கொள்ளவேண்டிய
இயல்புகள் கூறப்பட்டன.  இவ் அரசனே வினையம் (சூழ்ச்சி, வஞ்சனை)
பேணலும் வேண்டும் என முன்னே கூறப்பட்டது.  அரசியல் நெறி எத்துணைச்
சிக்கல் உடையது என்பதை எண்ண வேண்டியுள்ளது.  இதனைத் துன்பம்
அல்லது தொழு தகவு இல்லை என் இளங்கோவடிகள் குறித்தார்.  (சிலப். 3.
25. 104)                                                       11