4126. | 'சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந் நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு, குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்! வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். |
குவவுத் தோளாய் - திரண்ட தோள்களை உடையவனே!சிறியர் என்று - (உருவம், வலிமை, அறிவு போன்றவற்றில்) நம்மைவிடச் சிறியவர் என்று நினைத்து; இகழ்ந்து - இகழ்ச்சி செய்து; நோவு செய்வன செய்யல் - (எவர்க்கும்) துன்பம் செய்யும் காரியங்களைச் செய்ய வேண்டா; இந்நெறி இகழ்ந்து - இந்த நல்ல நெறியினைப் போற்றாது இகழ்ந்து; யான் ஓர் தீமை இழைத்தலால் - நான் ஒரு தீங்கினைச் செய்த காரணத்தால்; உணர்ச்சி நீண்டு - பகைமை உணர்ச்சி வளர்ந்து; குறியது ஆம் மேனி ஆய கூனியால் - குறுகிய உடம்பினை உடையவளான கூனியால்; வெறியன எய்தி- வறுமைகளை அடைந்து; வெந்துயர்க் கடலின் நொய்தின் வீழ்ந்தேன் - கொடிய துன்பமாகிய கடலில் எளிதாக விழுந்தேன். சிறியர் என இகழ்வதால் தீமை விளையும் என்பதைத் தன் இளம் பருவ நிகழ்ச்சியால் இராமன் எடுத்துக் காட்டினான். 'பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்' (1447) என்ற அடிகள் இந்நிகழ்ச்சியை விளக்கும். ''அந்தக் கூனி கூன் போக உண்டை தெறித்த போது' (7288) எனப் பின்னரும் கூறப்பெறும். சிறியர் என்று இகழ்தல் தீது என நீதி நூல்கள் உணர்த்தும். 'எள்ளற்க என்றும் எளியரென்று' (நான்மணி 3) என்பன காண்க. 'வெறியன எய்தி' என்றது, இராமன் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் பலவற்றை இழக்க நேர்ந்தது என்பதைக் குறிக்கும். வெந்துயர் - சீதையைப் பிரிந்த துயரம். இராமன் கூனியை உண்டை வில்லால் அடித்த செய்தி வான்மீகத்தில் குறிக்கப்படவில்லை. 12 |