4129. | 'இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும், திறத்துளி நோக்கின், செய்த வினை தரத் தெரிந்த அன்றே? புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும், அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி, அன்ப! |
அன்ப!- அன்பனே!திறத்துளி நோக்கின் - செம்மைமான வழியால் பார்க்கு மிடத்து; இறத்தலும் பிறத்தல் தானும் - சாதலும் பிறத்தலும்; என்பன இரண்டும்- என்று சொல்லப்படுவனவாகிய இரண்டு தன்மைகளும்; யாண்டும்- எப்பொழுதும்; செய்த வினை தர - (அவ்வவ் உயிர்கள்) செய்த வினைகள் தருதலால்; தெரிந்த அன்றே - (விளைவன எனத்) தெரிவதாகும் அல்லவா? பூவின்மேல் புனிதற்கேனும் - (திருமாலின் நாபித்) தாமரை மலர்மேல் தோன்றிய தூய பண்புகளை உடைய நான்முகனுக்கே யானாலும்; அறத்தினது இறுதி - அறநெறியிலிருந்து தவறுதல்; வாழ் நாட்கு இறுதி - ஆயுள் முடிவிற்குக் காரணமாம்; அஃது - அறநெறியிலிருந்து தவறாமை; உறுதி என்ப- ஆயுளுக்கு உறுதியைச் செய்வதாம் என்று கூறுவர்; இனி- இதைவிட; புறத்து உரைப்பது என்னே - வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது? திறத்து உளி - உளி என்பது மூன்றாம் வேற்றுமைப் பொருள் படுவதோர் இடைச் சொல். அறத்திற்கு மாறாக எவர் நடப்பினும் அதன் பயனை அனுபவிப்பர் என்பது வற்புறுத்தப்பட்டது. சாதலும் பிறத்தலும் வினைப்பயனால் நிகழும் என்பதைச் சிந்தாமணியும் உணர்த்தும், 'சாதலும் பிறத்தல்தானும் தன்விைபை் பயத்தினாகும்'' (சீவக. 269). 'வினைப் போகமே யொரு தேகம் கண்டாய். வினைதான் ஒழிந்தால், தினைப்போதளவும் நில்லாது கண்டாய்' (பட்டினத்-பொது.7). அருள் தருந் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ'' (2962), ''அறத்தினூஉங்கு ஆக்கமுமில்லை அதனை, மறத்தலினூங்கு இல்லை கேடு'' (குறள்-32) என்பன ஒப்புநோக்கத்தக்கன. 15 |